கோலாலம்பூர், நவ 6 — சும்பாங்கான் அசாஸ் ரஹ்மா (சாரா) திட்டத்தின் கூட்டாளர் கடைகளின் எண்ணிக்கை நவம்பர் 3 நிலவரப்படி 8,700 ஆக உயர்ந்துள்ளது.
கடந்த ஆண்டு 700 கடைகள் இருந்த நிலையில் இது குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்துள்ளதாக துணை நிதி அமைச்சர் லிம் ஹூய் யிங் தெரிவித்தார்.
இதில் சூப்பர் மார்க்கெட்டுகள், மளிகைக் கடைகள், கூட்டுறவு கடைகள் மற்றும் மினி மார்க்கெட்டுகள் ஆகியவை அடங்கும். இக்கடைகள் நகர்ப்புறம், கிராமப்புறம் மற்றும் புறநகர் பகுதிகளில் அமைந்துள்ளதால், அதிகமான பெறுநர்கள் இந்த உதவியை எளிதாக அணுக முடிகிறது.
“அரசு சிறு வியாபாரிகள் மற்றும் தனியார் மளிகைக் கடைகள், அதேபோல் கூட்டுறவு கடைகளும் சாரா திட்டத்தின் மூலம் பொருளாதார நன்மைகளைப் பெறுவதை உறுதி செய்யும்,” என்று அவர் மக்களவை சிறப்பு அமர்வில் தெரிவித்தார்.
MyKasih அமைப்பில் சிறு மற்றும் உள்ளூர் வியாபாரிகளைச் சேர்க்கும் அரசின் முயற்சிகள் குறித்து பக்ரி நாடாளுமன்ற உறுப்பினர் தான் ஹொங் பின் எழுப்பிய கேள்விக்கு லிம் மேற்படி பதில் அளித்தார்.
கிராமப்புற மற்றும் உள்நாட்டு பகுதிகளிலும் மளிகைக் கடைகள் மற்றும் சூப்பர் மார்க்கெட்டுகள் சாரா திட்டத்தின் பலன்களைப் பெறும் வகையில், ஜுவாலன் ரஹ்மா திட்டத்தின் இணைந்து சாரா விற்பனைகள் நடத்தப்படுகின்றன.
“இந்த அணுகு முறையின் மூலம், பெறுநர்கள் குறைந்த விலையில் அத்தியாவசியப் பொருட்களை, தங்களது மை கார்ட் அட்டையை பயன்படுத்தி சாரா கூட்டாளர் கடைகளில் வாங்க முடியும் என்றார் லிம்.




