கிள்ளான், நவ 6 — எதிர்வரும் 2025ஆம் ஆண்டு சிலாங்கூருக்கு வருகை தாருங்கள் மற்றும் 2026ஆம் ஆண்டு மலேசியாவிற்கு வருகை தாருங்கள் என்ற திட்டங்களின் முன்னெடுப்புகளை முன்னிட்டு சிலாங்கூர் மாநிலத்தின் சீன கிராமங்கள் (Chinese New Villages) முக்கியமான சுற்றுலா ஈர்ப்பிடங்களாக முன்னிறுத்தப்படலாம் என்று மந்திர் புசார் டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.
இக்கிராமங்கள் தங்களுக்கென தனித்துவமான வரலாறு, கலாச்சாரம் மற்றும் பாரம்பரிய உணவுப் பண்பாட்டை கொண்டுள்ளன. இவை சிலாங்கூரின் பாரம்பரியத்தையும் அடையாளத்தையும் பிரதிபலிக்கும் சுற்றுலா தளங்களாக விளம்பரப்படுத்தப்பட முடியும் என்றார்.
இந்த கிராமங்கள் சிலாங்கூரின் எட்டு மில்லியன் சுற்றுலாப் பயணிகள் இலக்கை அடைய உதவும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார். “சீனக் கிராமங்கள் தங்களது பாரம்பரியத்தைப் பேணிக்காக்கவும், நவீன வளர்ச்சியிலும் தங்களின் முக்கியத்துவத்தை நிலைநிறுத்தும் வலிமையையும் கொண்டுள்ளன,” என்று அவர் நேற்று இரவு சிலாங்கூரின் சிறந்த கிராம விருதுகள் 2025 நிகழ்வைத் தொடக்கி வைக்கும் போது கூறினார்.
சிலாங்கூர் நவீனமாவதுடன் தனது பாரம்பரியம், கலாச்சார மதிப்புகள் மற்றும் வரலாற்றை காக்கும் மாநிலமாக தொடர விரும்புகிறது. “சிறந்த கிராமம் என்பது பிற சமூகங்களுடன் தொடர்பு கொண்டு ஒன்றிணைந்து வாழும் மனப்பான்மையைக் கொண்டதாக இருக்க வேண்டும். இதுவே சிலாங்கூரின் வெற்றியின் அடிப்படை மதிப்பாகும்,” என்று அவர் குறிப்பிட்டார்.
நேற்றைய விழாவில் கம்போங் பகான் புலாவ் கேதம் “சிறந்த கிராமம்” விருதைப் பெற்றது, கம்போங் சிகிஞ்சான் சைட் C இரண்டாவது இடத்தையும், கம்போங் பாரு ஸ்ரீ செத்தியா (சுங்கை வே) மூன்றாவது இடத்தையும் பெற்றன.
வெற்றியாளர்களுக்கு முறையே RM3,000, RM2,000 மற்றும் RM1,500 ரொக்கப் பரிசுகள், கோப்பைகள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.




