கிள்ளான், நவ 4 — சிலாங்கூரில் ஹோம்ஸ்டேக்களை சட்டபூர்வமாக்கும் நடவடிக்கையை நடைமுறைப்படுத்திய முதல் மாவட்டமாக சபாக் பெர்ணம் உருவாகியுள்ளது.
இந்த நடவடிக்கை, ஹோம்ஸ்டே உரிமையாளர்கள் தங்கள் தொழிலை சட்டப்படி நடத்துவதையும் நிலப் பயன்பாட்டு விதிமுறைகளைப் பின்பற்றுவதையும் உறுதிப்படுத்தும் நோக்கத்துடன் எடுக்கப்பட்டுள்ளது.
இதுவரை 140 ஹோம்ஸ்டேக்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை நெற்பயிர் நிலங்களில் கட்டப்பட்டு, நிர்ணயிக்கப்பட்ட தரநிலைகளுக்கு இணையாக இல்லாதவை ஆகும் என மாநில உள்ளூர் அரசு மற்றும் சுற்றுலா நிர்வாக உறுப்பினர் டத்தோ இங் சுய் லிம் தெரிவித்தார்.
“பல ஹோம்ஸ்டேக்கள் உள்ளன. ஆனால், அவை சுற்றுலா, கலை மற்றும் கலாச்சார அமைச்சகத்தில் (Motac) பதிவு செய்யப்படவில்லை. இதனால், ஏதேனும் சம்பவம் நடந்தால் கண்காணிப்பு அல்லது சட்ட அமலாக்க நடவடிக்கை எடுப்பது கடினமாகிறது. மேலும் மாநில அரசு அல்லது உள்ளூர் ஆணையங்கள் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளது.
தற்காலிக உரிமக் கட்டணம் நியாயமானதாக இருக்கும் மற்றும் ஹோம்ஸ்டே இயக்குநர்களுக்கு சுமையாக இருக்காது என அவர் கூறினார்.
“சுற்றுலா துறையில் உள்ள அனைத்து தொழில்முனைவோர் சட்டத்தைப் பின்பற்றுவதற்கு உதவுவதே எங்கள் நோக்கமாகும்,`` என்றார்.
“தற்காலிக உரிமக் கட்டணத் தொகை இன்னும் விவாதத்தில் உள்ளது. ஆனால் அது மிக அதிகமாக இருக்காது. அவர்கள் அதைச் செலுத்தக்கூடிய அளவிலேயே இருக்கும்,” என்று அவர் கூறினார்.
அனைத்து ஹோம்ஸ்டே உரிமையாளர்களும் அடுத்த ஆண்டு Motac உடன் நடக்கும் விளக்கக் கூட்டத்துக்கு அழைக்கப்படுவார்கள். அங்கு அவர்கள் சட்டபூர்வமாக செயல்பட தேவையான விதிமுறைகள் பற்றி விளக்கப்படும் என்றார்.




