புத்ராஜெயா, நவம்பர் 5 — 2025 ஆம் ஆண்டுக்கான மலேசியவின் ஆக உயரிய கல்வி சான்றிதழ் ( எஸ்.டி.ஏ.எம் ) தேர்வு நவம்பர் 12 முதல் நவம்பர் 24 வரை நடைபெறும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் மொத்தம் 4,443 மாணவர்கள் இத்தேர்வில் பங்கேற்கவுள்ளனர். 135 மையங்களில் இத்தேர்வு நடைபெறும் நிலையில், தேர்வுகள் சீராக நடைபெற 852 பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், அனைத்து மாணவர்களும் STAM 2025 தேர்வு அட்டவணையைப் பார்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதில் தேர்வு தேதிகள், நேரம், தாள் குறியீடுகள் மற்றும் பாடப்பெயர்கள் உள்ளிட்ட முழு தகவல்களும் வழங்கப்பட்டுள்ளன. அந்த அட்டவணையைத் தேர்வுகள் வாரியத்தின் (LP) உத்தியோகபூர்வ தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யலாம்.
மேலும், மாணவர்கள் தங்கள் அடையாள ஆவணங்களையும் தேர்வு பதிவு அறிக்கைகளையும் தேர்வு மையத்துக்கு கொண்டு வர வேண்டும் என்றும், அனைத்து விதிமுறைகளையும் மற்றும் நடைமுறை வழிமுறைகளையும் கடைபிடிக்குமாறு அமைச்சு நினைவூட்டியுள்ளது. தேர்வு நடைபெறும் காலத்தில் அவசரநிலை, இயற்கை பேரழிவு அல்லது காய்ச்சல் போன்ற சூழ்நிலைகளில் மாணவர்கள் மற்றும் தேர்வு பணியாளர்களின் பாதுகாப்பு மற்றும் நலன் குறித்து அமைச்சு கவனம் செலுத்தும் என்றும் தெரிவித்துள்ளது.




