ஷா ஆலம், நவம்பர் 5: போக்குவரத்து அமைச்சு அடுத்தாண்டு பெருநாள் காலப்பகுதியில் உள்நாட்டு விமான டிக்கெட் மானியத்திற்காக மொத்தம் RM19.5 மில்லியன் ஒதுக்கியுள்ளது.
இந்த முயற்சி, சபா மற்றும் சரவாக்கில் வசிக்கும் மக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு முக்கிய பெருநாட்களின் போது மலிவான கட்டணத்தில் பயணம் செய்யும் வசதியை உறுதி செய்வதற்காக அரசால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சராசரி டிக்கெட் விலை RM990, இந்த மானியம் மூலம் பயணிகள் செலுத்த வேண்டிய அதிகபட்ச விமானக் கட்டணம் RM499 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது, என அந்தோணி லோக் தெரிவித்தார். ஒவ்வொரு தகுதியான டிக்கெட்டிற்கும் அரசு சராசரியாக RM491 மானியம் வழங்குகிறது,” என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போது தெரிவித்தார்.
2024 அரசு RM11 மில்லியன் ஒதுக்கி, அதிகபட்ச வரம்பான RM599- ஐ மீறும் 26,993 விமான டிக்கெட்டுகளுக்கு சராசரியாக RM408 மானியம் வழங்கியுள்ளது. உண்மையான டிக்கெட் சராசரி விலை RM1,007 ஆகும். இன்னும் பல பயணிகள் அரசு வழங்கியுள்ள மானியத்தை குறித்து முழுமையான தகவல்கள் அறிந்திருக்கவில்லை. அதனால், பயணிகள் பெறும் நன்மையை தெளிவாகப் புரிந்துகொள்ள, அமைச்சு விமான நிறுவனங்களுடன் இணைந்து அதற்கான சிறந்த அறிவிப்பு முறையை உருவாக்கும்,” என்று அவர் கூறினார்.




