பெட்டாலிங் ஜெயா, நவம்பர் 5- மலேசிய அரசு கட்டணத்துறை கூட்டரசு பிரதேச பிரிவு கோலாலம்பூர் சமீபத்தில் கிள்ளான் துறைமுகத்தில் நடத்திய ஒருங்கிணைந்த நடவடிக்கையில், சட்டபூர்வமான இறக்குமதி உரிமம் இன்றி நாட்டிற்கு கொண்டுவரப்பட்ட இரும்பு மற்றும் அலுமினியம் கழிவுப் பொருட்கள் அடங்கிய 53 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்துள்ளது. இதன் மொத்த மதிப்பு RM7.9 மில்லியன் ஆகும்.
“Operasi Besiport ” என்ற குறியீட்டுப் பெயரில் நடைபெற்ற இந்த நடவடிக்கை ஆகஸ்ட் 28 முதல் செப்டம்பர் 5 வரை கிள்ளான் வட துறைமுகம் மற்றும் மேற்கு துறைமுகத்தில் நடைபெற்றது. இதில் மலேசிய கட்டுமான தொழில் மேம்பாட்டு வாரியம் (CIDB) மற்றும் சிரிம் (SIRIM) இணைந்து செயல்பட்டதாக அதன் இயக்குநர் வான் நோரிசான் வான் டாவுத் தெரிவித்தார்.
துல்லியமான சோதனையில் 35 கண்டெய்னர்களில் கட்டுமானத் துறையில் பயன்படுத்தப்படும் ‘ஸ்டீல் ஸ்ட்ரக்சர்’ வகை இரும்பும், மேலும் 18 கண்டெய்னர்களில் அலுமினியம் மற்றும் இரும்பு கழிவுகளும் இருப்பது கண்டறியப்பட்டது. இந்த அனைத்து கண்டெய்னர்களும் ஒரே நிறுவனத்திற்குச் சொந்தமானவை,” என்று இன்று கூட்டரசு பிரதேச கட்டணத்துறை வளாகத்தில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
பறிமுதல் செய்யப்பட்ட சரக்குகளின் மொத்த எடை 956,686 கிலோகிராம். இதன் மொத்த மதிப்பு RM7.93 மில்லியன், மேலும் அதனுடன் தொடர்புடைய இறக்குமதி வரி மற்றும் சுங்க வரி சுமார் RM1,098,888 என மதிப்பிடப்பட்டுள்ளது.
“இந்தச் சம்பவத்தில், சம்பந்தப்பட்டவர்கள் தவறான அறிவிப்பைச் செய்ததாக நம்பப்படுகிறது, இதன் மூலம் இறக்குமதி உரிமம் பெற வேண்டிய தேவையைத் தவிர்க்க முயன்றுள்ளனர்,” என்றார். அதேசமயம், இந்த வழக்கில் இதுவரை எந்தவித கைது நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் தெரிவித்தார். மேலும் இவ்வாறான மாதிரியான குறைந்த தரமான பொருட்கள் கட்டிடத் துறையில் பயன்படுத்தப்பட்டால், அது பொதுமக்களின் பாதுகாப்புக்கு ஆபத்தாக அமையும் என அவர் கூறினார்.




