குவாந்தான், நவம்பர் 5 —பகாங் மாநில மக்களுக்கு இன்று முதல் டிசம்பர் 25 வரை ஏற்படவுள்ள “கிங் டைட்” (King Tide) எனப்படும் உயர்ந்த அலைகள் தொடர்பாக எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடல் நீர்மட்டம் குவாந்தான், பெக்கான் மற்றும் ரோம்பின் போன்ற கடலோர பகுதிகளில் உயரும் என எதிர்பார்க்கப்படுவதாக குவாந்தான் மாவட்ட நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறை (JPS) பொறியாளர் ரோஹுஷ்சிபா அஹ்மத் ரத்ஸி தெரிவித்தார்.
ஆற்றங்கரையிலும் தாழ்நிலப் பகுதிகளிலும் வசிக்கும் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். இந்த வடகிழக்கு பருவக்காற்று காலத்தில், கிங் டைட் கனமழையுடன் ஒரே நேரத்தில் ஏற்பட்டால், அந்த இடங்களில் வெள்ள அபாயம் அதிகம் இருக்கும் என அவர் கூறினார்.
மேலும் கிடைத்த தரவின் அடிப்படையில், கிங் டைட் இன்று முதல் நவம்பர் 8 வரை, மேலும் நவம்பர் 10 மற்றும் 11 தேதிகளில், இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் ஏற்படும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் கூரினார். அதேபோல், டிசம்பர் 3 முதல் 7 வரை, டிசம்பர் 9 முதல் 11 வரை, டிசம்பர் 20 முதல் 22 வரை, மற்றும் டிசம்பர் 24 மற்றும் 25 தேதிகளில் கூட, இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் கிங் டைட் நிகழும் என முன்னறிவிப்பு வழங்கப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் மொத்தம் 57 வெள்ள அபாயப் பகுதிகள் உள்ளன, அதில் தற்போது 19 சைரன் நிலையங்கள் சோதனைக்காக இயக்கப்படுகின்றன. முன்னதாக சில சைரன் நிலையங்களில் விலங்குகளால் ஏற்படும் குறுக்கீடுகள் கண்டறியப்பட்டுள்ளதாகவும், எந்தவித காரணமுமின்றி சைரன் ஒலித்தால், பொதுமக்கள் உடனடியாக JPS-ஐத் தொடர்பு கொண்டு தகவல் அளிக்க வேண்டும், என அவர் கூறினார்.




