பினாங்கு, நவ 5 - நேற்று மாலை, பினாங்கு, பாயான் லெப்பாஸ், ஜாலான் கெனாரியில் ஏற்பட்ட நிலம் உள்வாங்கிய சம்பவம் காரணமாகப், பாதுகாப்பு கருதி அப்பகுதி தற்காலிகமாக மூடப்பட்டது.
இச்சம்பவம் குறித்து மாலை 4 மணி தொடங்கி 5 மணி வரை புகார்கள் பெறப்பட்ட நிலையில், பொதுப்பணித் துறை (ஜே.கே.ஆர்) மற்றும் தொடர்புடைய நிறுவனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகப் பாயான் லெப்பாஸ் சட்டமன்ற உறுப்பினர் டத்தோ அஸ்ருல் மஹாதீர் அசிஸ் தெரிவித்தார்.
சாலையில் மிகப் பெரிய குழி ஏற்பட்டிருப்பதால் அப்பகுதி பயன்பாட்டிற்கு ஆபத்தானது என்றும் உறுதி செய்யப்பட்டுள்ளதாக டத்தோ அஸ்ருல் தெரிவித்தார்.
இச்சம்பவத்தினால் இதுவரை விபத்துக்கள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் குறிப்பிட்டார். இருப்பினும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அந்தப் பகுதிக்குச் செல்வது கட்டுப்படுத்தப்படுவதாக அஸ்ருல் கூறினார்.
இச்சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய முழுமையான ஆய்வு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதால் பழுதுபார்க்கும் பணிகளை உடனடியாக மேற்கொள்ள முடியாது என்றும் அவர் விளக்கினார்.
பெர்னாமா




