கிள்ளான், நவம்பர் 5- தெற்கு கிள்ளான் மாவட்ட நார்கோட்டிக் குற்றப்பிரிவு (BSJND) மேற்கொண்ட ரகசிய தகவல் மற்றும் நடவடிக்கையின் மூலம், தமான் செந்தோசாவில் உள்ள ஒரு வீட்டில் நடைபெற்ற போதைப்பொருள் கடத்தல் செயல்பாடு வெற்றிகரமாக தடுக்கப்பட்டது.
துணை சூப்ரிண்டெண்டன் அனிசாம் ஹுசின் தலைமையிலான சோதனையில், ஒரு உள்ளூர் ஆண் கைது செய்ததுடன், அவரிடமிருந்து 53.1 கிராம் எடையுள்ள நான்கு பைகளில் நிரப்பப்பட்ட ஷாபு போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டதாக தெற்கு கிள்ளான் போலீஸ் அறிக்கையில் கூறப்பட்டது.
அதே வீட்டில் தொடர்ந்த தேடுதலில், மேலும் 33.9 கிராம் எடையுள்ள மூன்று பைகளில் ஷாபு போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது. விசாரணை பிறகு, ஒரு குப்பைத் தொட்டியில் மறைக்கப்பட்டிருந்த 14 சிறிய பிளாஸ்டிக் பைகளில் கஞ்சா மற்றும் கேடமின் பொருள்களும் கண்டுபிடிக்கப்பட்டன.
அதன் பின்னர் சந்தேகநபரின் வாகனத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில், ஒரு சாக்கில் மறைக்கப்பட்டிருந்த 24 பிளாஸ்டிக் பைகளில் மொத்தம் 24 கிலோ ஷாபு மற்றும் மூன்று கருப்பு பிளாஸ்டிக் பைகளில் 3.1 கிலோ ஷாபு கைப்பற்றப்பட்டது.
மொத்தமாக, சுமார் RM933,108 மதிப்புள்ள 27.3 கிலோ எடையுள்ள பல்வேறு வகையான போதைப்பொருட்கள் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும், சந்தேகநபரின் இரண்டு கார்களும் கடத்தல் நடவடிக்கையில் பயன்படுத்தப்பட்டதாக நம்பப்பட்டதால் பறிமுதல் செய்யப்பட்டன. குற்றம் நிரூபிக்கப்பட்டால் மரணதண்டனை அல்லது ஆயுள் சிறைத் தண்டனை மற்றும் குறைந்தது 15 முறை பிரம்படி தண்டனை வழங்கப்படும்.




