லூயிஸ்வில்லி, நவ 5- அமெரிக்காவின் லூயிஸ்வில்லி முகமது அலி சர்வதேச விமான நிலையத்தில், UPS நிறுவனத்திற்குச் சொந்தமான மெக்டொனல் டக்ளஸ் MD-11 ரக சரக்கு விமானம் ஒன்று, ஹவாய் நோக்கிப் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இன்று அதிகாலை (உள்ளூர் நேரம் மாலை 5:15 மணியளவில்) விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறைந்தது ஏழு பேர் பலியாகினர் மற்றும் பலர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து பெரும் வெடிப்பையும் தீயையும் ஏற்படுத்தியது. கென்டக்கி மாகாண ஆளுநர் ஆண்டி பெஷியர் அவர்கள், பலி மற்றும் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று கவலை தெரிவித்தார்.
விமானத்தில் மூன்று விமான ஊழியர்கள் (Three crew members) இருந்ததாக UPS நிறுவனம் உறுதிப்படுத்தினாலும், எந்தவொரு உயிரிழப்பு அல்லது காயம் குறித்து தங்களால் இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை என்று கூறியுள்ளது.
இருப்பினும், மூன்று ஊழியர்களின் நிலை என்னவென்று தெரியாததால், அவர்களின் பாதுகாப்பு குறித்து ஆளுநர் பெஷியர் ஆழ்ந்த கவலை தெரிவித்தார்.
இந்த விபத்திற்கான காரணம் குறித்து அமெரிக்கக் கூட்டாட்சி விமானப் போக்குவரத்து நிர்வாகம் (FAA) மற்றும் தேசியப் போக்குவரத்துப் பாதுகாப்புக் கழகம் (NTSB) இணைந்து விசாரித்து வருகின்றன.
இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விமான நிலையத்தில் செவ்வாய்க்கிழமை இரவு புறப்படவிருந்த அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன, மேலும் UPS நிறுவனம் அதன் சரக்குத் தொகுப்புப் பிரிப்பு நடவடிக்கைகளையும் நிறுத்தி வைத்துள்ளது.




