ஷா ஆலம், நவ 4 – அரசு மானியமின்றி தள்ளுபடி விற்பனைகளை நடத்த பல்பொருள் அங்காடிகள் மற்றும் பிற தரப்பினரை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவு அமைச்சகம் (KPDN) ஊக்குவிக்கிறது. இது ஜுவாலான் ரஹ்மா மடாணி திட்டத்திற்கான மாற்று வழியாகும்.
இந்த நடவடிக்கை மக்களுக்கு நியாயமான விலையில் பொருட்களை பெறும் வாய்ப்புகளை அதிகரிக்கவும், அரசின் நிதிச்சுமையை குறைக்கவும் உதவும் என அமைச்சர் டத்தோ அர்மிஜான் முகமட் அலி கூறினார்.
“இத்தகைய விற்பனைகளை நடத்த விரும்பினால் அமைச்சகத்திற்கு தெரிவிக்கலாம். அரசுக்கு நிதி சுமை இல்லையெனில், நாம் ஒத்துழைக்கத் தயாராக உள்ளோம்,” என்று அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
அவர் புக்கிட் கந்தாங் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோ சயீட் அபூ ஹுசைன் ஹபீஸ் சயீட் அப்துல் பாசல் எழுப்பிய கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.
விலைகளை கண்காணிக்க Price Catcher செயலியின் பயன்பாட்டை உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கை செலவு அமைச்சகம் வலுப்படுத்தியுள்ளது. இதன் மூலம் நுகர்வோர் அத்தியாவசிய பொருட்களின் விலைகளை எளிதில் ஒப்பிட முடியும்.
முன்பு, விலை கண்காணிப்பு அதிகாரிகளின் தரவையே இந்த செயலி முழுமையாக சார்ந்திருந்தது. ஆனால் இப்போது சூப்பர் மார்க்கெட்டுகளுடன் இணைந்து நேரடி (real-time) விலைத் தகவலைப் பெறுகிறது.
இது தரவின் துல்லியத்தையும் மேம்படுத்தி, செலவையும் குறைத்து, சில்லறை விற்பனையாளர்களுக்கிடையே ஆரோக்கியமான போட்டியை ஊக்குவிக்கிறது.




