கோலாலம்பூர், நவம்பர் 5 —எம். இந்திரா காந்தியின் முன்னாள் கணவர் ரிடுவான் அப்துல்லாவுக்கு எதிராகப் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு 10 ஆண்டுகளுக்கு மேலாகியும் அவர் மலேசியாவில் சுதந்திரமாக இருப்பது குறித்து காவல்துறை உடனடியாக விசாரிக்க வேண்டும் என பிரதமர் துறை துணை அமைச்சர் எம். குலசேகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்திரா காந்தியின் முன்னாள் கணவரான ரிடுவான் அப்துல்லா பூடி95 மற்றும் சாரா போன்ற அரசாங்க உதவிகளைப் பயன்படுத்தியதாக வெளியான தகவல் குறித்து உடனடியாக விசாரித்து, நீதிமன்ற உத்தரவுகளை அமல்படுத்த வேண்டும் என்று அவர் கேட்டுக் கொண்டார்.
ரிடுவான், தனது 11 மாதக் குழந்தையான மகள் பிரசானா டிக்ஸாவை கடத்திச் சென்றதாகக் கூறப்படுகிறது. மேலும், அரசாங்க உதவித் திட்டங்களில் ஆய்வு செய்ததில், அவர் RM100 சாரா உதவித் தொகையையும் 300 லிட்டர் பூடி 95 மானியத்தையும் பயன்படுத்தியிருப்பது தெரியவந்துள்ளது.
இந்திரா காந்தியின் வழக்கறிஞர் ராஜேஷ் நாகராஜன், நீதிமன்ற உத்தரவுக்கு இணங்கத் தவறியதற்காக காவல்துறையையும், அட்டர்னி ஜெனரல் துறையின் (AGC) "மௌனத்தையும்" கடுமையாக விமர்சித்துள்ளார்.
இந்நிலைப்பாட்டைக் கண்டித்து, இந்திரா காந்தி நடவடிக்கை குழு , எதிர்வரும் நவம்பர் 22-ஆம் திகதி சோகோவிலிருந்து புக்கிட் அமான் காவல்துறைத் தலைமையகம் வரை "நீதிப் பேரணி" ஒன்றை நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளது.




