ஷா ஆலம், நவம்பர் 5 — இந்தோனேசியாவின் சுகர்னோ-ஹட்டா சர்வதேச விமான நிலையத்தில் சுமார் மூன்று மணி நேரத்திற்கு மேல் சிக்கித் தவித்த 61 மலேசிய மாணவர்களைச் சார்ந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் விசாரணைத் தொடங்கியுள்ளது.
இதுவரை அந்தச் சம்பவம் குறித்து ஏழு போலீஸ் புகார்கள் பெறப்பட்டுள்ளன என்றும், சம்பவம் குற்றவியல் சட்டத்தின் கீழ் விசாரிக்கப்படுவதாக புக்கிட் அமான் வணிக குற்றத் தடுப்பு துறை இயக்குநர் டத்தோ ருஸ்டி முகமட் இசா தெரிவித்தார்.
அக்டோபர் 23 அன்று மாணவர்கள் அந்த விமான நிலையத்தில் சுற்றுலா முகவர் நிறுவனத்தின் மேலாண்மை பிரச்சனையால் சிக்கித் தவித்தபோது, இந்தோனேசியாவில் உள்ள மலேசிய தூதரகம் உடனடி உதவி செய்தது என்று முன்னதாக ஹரியான் மெட்ரோ பத்திரிகை தெரிவித்திருந்தது.
சம்பவம் அறிந்தவுடன் தூதரகம் விரைவாக நடவடிக்கை எடுத்து, மலேசிய பிரஜையாகிய ஒரு உள்ளூர் சுற்றுலா முகவர் நிறுவனத்தின் உதவியுடன் மாணவர்கள் அனைவரும் விமான நிலையம் அருகே உள்ள ஓர் ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டதாக இந்தோனேசியாவிற்கான மலேசிய தூதர் டத்தோ சையத் முகமட் ஹஸ்ரின் தெங்கு ஹுசின் தெரிவித்தார்.
இதற்கு முன்பு, சமூக ஊடகங்களில் பரவிய வீடியோக்களில், மலேசிய மாணவர்கள் குழு ஒரு சுற்றுலா முகவர் நிறுவனத்தால் ஏமாற்றப்பட்டதாகக் கூறி, மதியம் விமான நிலையத்தில் இறங்கிய பின் மூன்று மணி நேரத்திற்கும் மேலாக காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவித்தனர்.




