பாச்சோக், நவம்பர் 5 — புதியதாகப் பிறந்ததாக நம்பப்படும் ஒரு ஆண் குழந்தை இன்று குனோங் பகுதியில் உள்ள பக் படோல் தேசிய இடைநிலைப் பள்ளி அருகே உள்ள கட்டுமானத்தில் இருக்கும் ஒரு வீட்டில் கண்டெடுக்கப்பட்டது.
மாளிகாய் சுகாதாரக் கிளினிக் பணியாளர்கள் இன்று காலை 8.45 மணியளவில் அக்குழந்தையை கண்டுபிடித்ததாக பாச்சோக் மாவட்ட போலீஸ் தலைவர் சூப்ரிண்டெண்டன் முகமது இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.
அந்த ஆண் குழந்தை ஆடையின்றி, பச்சை நிற துணியால் சுற்றப்பட்ட நிலையில், கட்டுமானத்தில் இருக்கும் அந்த வீட்டில் அருகிலிருந்த பொதுமக்களால் கண்டுபிடிக்கப்பட்டது. மேலும் மருத்துவர் மேற்கொண்ட ஆரம்ப பரிசோதனையில், குழந்தைக்கு வெளிப்படையான காயங்கள் எதுவும் இல்லை, ஆனால் முகத்தில் சிவப்பு தடங்கள் காணப்பட்டன; இது குழந்தை புதிதாகப் பிறந்ததை உணர்த்துகிறது என்று அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறினார்.
குழந்தை மேல் பரிசோதனைக்காக குபாங் கிரியானில் உள்ள மலாயா அறிவியல் பல்கலைக்கழக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, தற்போது நிலைமை சீராக உள்ளதாகத் தெரிவித்தார்.
இந்த வழக்கு தொடர்பாக தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி 014-2714926 என்ற தொலைபேசி எண்ணில் அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தை தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.




