ஷா ஆலாம், நவம்பர் 5: பிரபல மலேசிய ராப் பாடகர் வீ மேங் சி, அல்லது மேடைப்பெயராக அறியப்படும் நேம்வீ, தற்போது போலீசாரால் தேடப்பட்டு வருகிறார். அவர் கடந்த மாதம் தலைநகரிலுள்ள ஒரு ஆடம்பர ஹோட்டலில் உயிரிழந்த தைவான் நாட்டைச் சேர்ந்த சமூக ஊடகப் பிரபல பெண்ணின் மரணத்துடன் தொடர்புடைய விசாரணைக்காக தேடப்படுகிறார்.
42 வயதான நேம்வீ, ஹ்சியென் யுன் ஹ்சின் (31) என்பவரின் சடலம் அக்டோபர் 22 அன்று மதியம் 1.40 மணியளவில் ஜாலான் கொன்லே பகுதியில் உள்ள பன்யன் ட்ரீ ஹோட்டல் அறையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து காணாமல் போனதாக நம்பப்படுகிறது.
கோலாலம்பூர் போலீஸ் தலைவர் டத்தோ’ பாதில் மார்சூஸ் தெரிவித்ததாவது, இந்த வழக்கு ஆரம்பத்தில் திடீர் மரணம் (SDR) எனப் பதிவு செய்யப்பட்டது. ஆனால் பின்னர் கொலைக்கான சாத்தியம் இருப்பதாக நம்பப்பட்டதால், வழக்கு குற்றவியல் பிரிவு 302 (Section 302 of the Penal Code) கீழ் மறுவகைப் படுத்தப்பட்டதாக கூறினார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் விசாரணை விவரங்கள் பரவலாக வெளிவந்ததை அடுத்து, நேம்வீ தன்னைச் சுற்றியுள்ள சட்ட நடவடிக்கைகள் குறித்து அறிந்து கொண்டு ஒளிந்துவிட்டதாக போலீஸ் நம்புகிறது.
“இன்றுவரை அவரை கண்டுபிடிக்க முடியவில்லை; அவர் மாயமானதாக நாங்கள் நம்புகிறோம்.
முன்பாக வழக்கு SDR என வகைப்படுத்தப் பட்டிருந்தது; ஆனால் பிரிவு 302-க்கு மாற்றப்பட்டபின் அவர் காணாமல் போனார்,” என்று டத்தோ’ பாதில் கூறினார்
மலேசிய குற்றவியல் சட்டத்தின் பிரிவு 302 கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படுகிறது. மேலும் இந்த பிரிவு போலீசாருக்கு சம்பந்தப்பட்ட எவரையும் கைது செய்ய அதிகாரம் அளிக்கிறது.
போலீசாரின் ஆரம்ப விசாரணையில், நேம்வீ தான் மரணமடைந்த யுன் ஹ்சின் உடன் கடைசியாக காணப்பட்ட நபர் என நம்பப்படுகிறது.




