கோலாலம்பூர், நவ 4 - ரெபிட் கேஎல் இரயில் தீப்பற்றியதாகக் கூறப்படுவதை தேசிய பொதுவசதி கட்டமைப்பு நிறுவனம் (Prasarana) மறுத்துள்ளது.
அப்படியொரு சம்பவம் ஏற்படவில்லை என்றும் அம்பாங் எல்ஆர்டி வழித்தடத்தில் தீ ஏற்பட்டதாகக் கூறி வைரலாக்கப்பட்டுள்ள காணொளி போலியானது எனவும் அது தெளிவுப்படுத்தியது.
மேலும், அனைத்து இரயில் சேவைகளும் எந்த இடையூறுமின்றி வழக்கம் போலவே செயல்படுவது விசாரணையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதுபோன்ற வதந்திகள், பொது மக்கள் மத்தியில் வீண் பதற்றத்தை ஏற்படுத்துவதோடு நாட்டின் பொது போக்குவரத்தின் நற்பெயரையும் கெடுக்கலாம்.
எனவே, இதனை தமது தரப்புக் கடுமையாகக் கருதுவதாக தேசிய பொதுவசதி கட்டமைப்பு நிறுவனம் தெரிவித்தது.
அதுமட்டுமில்லாமல், பொய்ச்செய்திகளைப் பரப்புவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும் தயங்கமாட்டோம் என அது எச்சரித்தது.
பொதுமக்கள் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவும் தகவல்களை எளிதில் நம்பாமல், உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களை ரெபிட் கேஎல் (Rapid KL) நிறுவனத்தின் அதிகாரப்பூர்வத் தளங்களில் பெறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.




