கிள்ளான், நவ 4- இந்து சமய வழிபாட்டு தலங்கள் யாவும் சமுதாய மையங்களாக உருமாற வேண்டும் என்னும் இலக்கிற்கு இசைவாகவும் ஒத்துழைப்பு அளிக்கும் வகையிலும் மடாணி அரசாங்கம் தேசிய அளவில் ஆயிரம் ஆலயங்களுக்கு 20ஆயிரம் ரிங்கிட் வீதம் 2 கோடி வெள்ளியை நிதியாக அளிக்க முன்வந்ததற்கு செந்தோசா வாக்காளர்களின் சார்பில் பாராட்டும் மலேசிய இந்து சமுதாயத்தின் சார்பில் நன்றியும் தெரிவிப்பதாக செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் மாண்புமிகு டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் தெரிவித்துள்ளார்.
டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ம் தலைமையிலான ஒற்றுமை அரசாங்கத்தின் கீழ் நாடு கட்டம் கட்டமாக பொருளாதார முன்னேற்றம் கண்டு வரும் வேளையில் இந்து சமய மறுமலர்ச்சிக்காக 20 மில்லியன் வெள்ளி ஒதுக்கப்பட்டிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.
இது, ஆலயங்களுக்கான நிதி உதவியாக மட்டுமல்லாமல், இந்த நிதிமூலம் சமூக நலன், கல்வி மற்றும் வளர்ச்சி சார்ந்த பல நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் பயன்படுத்தலாம்
அதற்கு ஏற்ப, சக நண்பர்கள், சமூகத் தலைவர்கள், சமய அமைப்புகளின் தலைவர்கள் ஆலயத் தலைவர்கள் உள்ளிட்ட அனைத்துதா தரப்பினரும் தங்களுக்கு இடையேயான வேறுபாட்டை மறந்து நம் சமுதாயம்-நம் சமயம் என்ற ஒற்றை சிந்தனையில் நிலைகொண்டு இதற்கு துணை நிற்க வேண்டும்.
இத்தகைய பொன்னான வாய்ப்பை நன்முறையில் பயன்படுத்துமாறும் இந்த நிதியை எவ்வாறு பயனுள்ளதாக பயன்படுத்தி சமூக ஒற்றுமையையும் நலனையும் மேம்படுத்தலாம் என்றும் தக்கார் சிந்திக்க வேண்டுமே அன்றி, வள்ளுவ பெருமான் எச்சரித்துள்ளபடி தகவிலாரைப் போல நடந்து கொள்ள முற்பட்டால், அது நம் சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்.
20 ஆயிரம் வெள்ளியைப் பெறுகின்ற ஒவ்வோர் ஆலயமும், அந்த நிதியில் இருந்து பத்தில் ஒரு பங்கான 2000 வெள்ளியை சமய சமூக நலம் கருதி கொடைவழங்க முன்வந்தால், 1000 ஆலயங்களும் இணைந்து .2 மில்லியன் வெள்ளியைத் திரட்ட முடியும்.
இந்த தொகை பல்வேறு சமூக நலத்திட்டங்கள் மற்றும் அறக்கட்டளைகள் மூலம் மக்களுக்கு பயனளிக்கும்.
இந்த முயற்சி 2026 ஆம் ஆண்டுக்கான சிறந்த தொடக்கமாக அமையும். உண்மையில் மித்ரா நிதியிலிருந்து ஆண்டுதோறும் பத்து விழுக்காட்டு நிதியை, மித்ரா, செடிக் என்னும் பெயரில் தொடங்கப்பட்ட காலத்தில் இருந்தே தனியே ஒதுக்கி சேமித்து வைத்திருந்தால், இந்த பத்தாண்டுகளில் அது 100 கோடியாக உயர்ந்திருக்கும்.
அதைக் கொண்டு மிகப் பெரிய நிதிக் கட்டமைப்போடு இந்திய சமுதாயத்திற்கான நிரந்தர நிதியமாக ன உருவாக்கி இருக்கலாம்.
இதைப் பற்றியெல்லாம் எவரும் சிந்திக்கவில்லை; போனது போனதாக இருக்கட்டும். இந்த ஆலய நிதியிலிருந்தாவது ஒரு பொது நிதியை சமுதாயத்தின் எதிர்காலம் கருதி சேமிப்பதில் அக்கறை கொள்வோம் என்று பி கே ஆர் உச்சமன்ற உறுப்பினருமான டாக்டர் குணராஜ் தெரிவித்துள்ளார்.
மலேசிய இந்திய சமுதாய பாதுகாப்பு எதிர்கால நலன் ஆகியவற்றை கருத்தில் கொண்டு இதில் அனைவரும் ஆர்வம் காட்டினால் சமூகத்திற்கு நல்லது
தவிர, இது நம் சமூகத்தில் ஒற்றுமையும் ஒத்துழைப்பும் வலுப்பெற வழிவகுக்கும் என்று உறுதியாக நம்புவதாக மக்கள் நீதிக்கட்சி -பிகேஆர் தலைவர்களில் ஒருவருமான குணராஜ் ஜோர்ஜ் இதன் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.




