கோலாலம்பூர், நவ 4 — உலு சிலாங்கூர் பகுதியில் முன்னாள் காவல்துறை உறுப்பினர் சங்கத்தின் பிரதிநிதிகள் என தங்களை அறிமுகப்படுத்தி, பொதுமக்களிடமிருந்து பண நன்கொடை கேட்டு வந்ததாக சந்தேகிக்கப்படும் இரண்டு பெண்கள் கைது செய்யப்பட்டனர்.
மாலை 5.50 மணியளவில் இரும்பு பொருள் வியாபாரி ஒருவரிடமிருந்து புகார் பெறப்பட்டது. அவர் இரண்டு பெண்கள் தன்னை அணுகி குறிப்பிட்ட சங்கத்தின் பெயரில் RM1,000 நன்கொடை கேட்டதாகக் கூறியுள்ளார் என உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை தலைவர் இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.
“வழங்கப்பட்ட தகவல்கள் அடிப்படையில், உலு சிலாங்கூர் மாவட்டக் காவல்துறை தலைமையகத்தின் குழு ஒன்று 23 மற்றும் 37 வயதுடைய இரண்டு பெண்களை கைது செய்தது,” என்று இப்ராஹிம் ஹுசின் தெரிவித்தார்.
கைது நடவடிக்கையின்போது, காவல்துறை ஒரு பெரோடுவா மைவி கார், ஆறு ரசீது புத்தகங்கள், 15 ஆவணங்கள், ஒரு நலச் சங்கத்தின் பெயரில் ஒன்பது கோப்புகள், இரண்டு வெள்ளி சங்கிலிகள் மற்றும் RM550 ரொக்கம் உள்ளிட்ட பல பொருட்களை பறிமுதல் செய்தது.
“இருவருக்கும் குற்றச் செயல்கள் அல்லது போதைப்பொருள் தொடர்பான எந்தப் பதிவும் இல்லை. மேலும், போதைப்பொருள் பரிசோதனை முடிவும் எதிர்மறையாக இருந்தது.
அவர்கள் தற்போது குற்றச் சட்டப் பிரிவு 419 மற்றும் 1947 ஆம் ஆண்டு “வீடு வீடாகவும் சாலையிலும் நன்கொடை சேகரிப்பு சட்டப் பிரிவு 3(3) கீழ் விசாரணைக்காக தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்,” என்று அவர் கூறினார்.
— பெர்னாமா




