ஷா ஆலாம், நவ 4 — நெகிரி செம்பிலான் மாநிலத்தில் உள்ள பள்ளி ஒன்றில் நான்காம் வகுப்பு மாணவன் ஒருவர் மரணமடைந்த சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று கல்வி அமைச்சகம் (KPM) வலியுறுத்தியுள்ளது.
அச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட குடும்பம் வெளியிட்ட தகவல் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. அதனை ஆய்வு செய்து வருவதாக அமைச்சகம் அறிக்கை ஒன்றின் மூலம் தெரிவித்துள்ளது.
“தற்போது, இந்த வழக்கில் காவல்துறை விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குற்றம் புரிந்தவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மறைந்த மாணவனின் குடும்பத்துக்கு நீதி கிடைக்க வேண்டும்,” என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அந்த மாணவன் நெகிரி செம்பிலானின் செனாவாங் பகுதியில் உள்ள தனது பள்ளியின் கழிப்பறையில் மயங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டு, பின்னர் மரணமடைந்ததாக உறுதி செய்யப்பட்டது.
பிரேதப் பரிசோதனையில், மாணவனின் கழுத்தில் ஏற்பட்ட அழுத்தமே மரணத்திற்கு காரணம் எனவும், உடலில் வேறு காயங்கள் எதுவும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை தற்போது சம்பவத்தின் உண்மையான காரணத்தை கண்டறிய விசாரணையைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.




