கிள்ளான், நவ 4- கிள்ளான் மாவட்டத்தின் கம்போங் ஜாவாவில் மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (WCE) கட்டுமானத்திற்காக நிலம் கையகப்படுத்தப்பட்ட பகுதியை ஏழு நாட்களுக்குள் காலி செய்யுமாறு 19 நில உரிமையாளர்களுக்கு சிலாங்கூர் மாநில அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது.
குடியிருப்பாளர்களுக்கும் தொடர்புடைய முகவர் நிலையங்களுக்கும் இடையே ஒரு சந்திப்பில் பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்ட பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டதாக மாநில வீட்டு வசதி செயற்குழு உறுப்பினர் போர்ஹான் அமான் ஷா தெரிவித்துள்ளார்.
2023 ஆம் ஆண்டில், நிலம் கையகப்படுத்தும் சட்டம் 1960-இன் கீழ் சட்டப்பூர்வமாக நிலம் கையகப்படுத்தும் செயல்முறை நிறைவடைந்த போதிலும், மொத்த இழப்பீட்டுத் தொகையான RM9.85 மில்லியனில் 75% ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்ட நிலையிலும், 19 நில உரிமையாளர்களும் இடத்தை காலி செய்ய மறுத்து வந்தனர் என்று செய்திகள் வெளியானது.
"அவர்கள் இன்னும் அந்த இடத்தை காலி செய்யத் தவறினால், ஏழு நாட்களுக்குப் பிறகு அவர்கள் வெளியேற்றப்படுவார்கள்," என்று போர்ஹான் கூறினார். நவம்பர் 10 முதல் கட்டுமானப் பணிகளைத் தொடங்குவதற்கு முன், WCE சென்.பெர்ஹாட் நெடுஞ்சாலை நிறுவனத்திற்குச் சுத்தப்படுத்தும் பணிகளுக்காக அந்த தளத்திற்குள் நுழைய அனுமதி வழங்கப்படும் என்றும் அவர் மேலும் கூறினார்.
மொத்தம் 233 கி.மீ. நீளமுள்ள இந்த விரைவுச்சாலை, சிலாங்கூரில் உள்ள பந்திங் முதல் பேராக்கின் தைப்பிங் வரை செல்கிறது.அதன் 11 பிரிவுகளில் எட்டு திறக்கப்பட்டு விட்டது, மேலும் முழுப் பாதையும் 2027-இல் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






