ஜொகூர் பாரு, நவம்பர் 3 — நாடெங்கும் நடைமுறையில் உள்ள Bas.My அளவில்லா பயண பாஸ் விலை மாதம் RM50 -லிருந்து RM30 ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மக்கள் தினமும் வெறும் RM1 செலவில் வரையறையற்ற பயணத்தை அனுபவிக்கலாம்.
உடனடியாக அமலுக்கு வரும் இந்த விலை குறைப்பால் மக்களின் வாழ்வுக் கட்டண சுமை குறைவதுடன், மாதத்திற்கு RM200 முதல் RM300 வரை சேமிக்க முடியும் என்றார் போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக்.
2022ஆம் ஆண்டு தொடங்கிய “Program Bas Berhenti-Henti (SBST)” ஜொகூர் பாருவில் நாடு முழுவதும் அதிக பயணிகளைப் பெற்றுள்ளது. இவ்வாண்டு சராசரியாக மாதத்திற்கு 9.4 லட்சம் (940,000) பேர் இந்த சேவையைப் பயன்படுத்தியுள்ளனர்.
ஜொகூர் பாருவில் தற்போது Bas.My சேவை 21 வழித்தடங்களில் செயல்படுகிறது, இது முன்பு இருந்த 18 வழித்தடங்களிலிருந்து 3 வழிகள் அதிகரித்துள்ளது. இதற்காக கூட்டரசு இரண்டு ஆண்டுகளுக்கு மொத்தம் RM134.94 மில்லியன் முதலீடு செய்ய உள்ளது. இதன் மூலம் SBST ஜொகூர் பாரு சேவை தொடர்ந்து மக்களுக்கு நன்மை அளிக்க முடியும் என்று அவர் கூறினார்.
அதே நேரத்தில், Bas.My ஜொகூர் பாரு சேவை இயக்குநர்கள் மாதந்தோறும் 10 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகளை ஈர்க்கும் இலக்கை நோக்கி முயற்சிக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். இந்த முயற்சி மலேசிய குடிமக்களுக்கு மட்டுமே பொருந்தும். வெளிநாட்டினர்கள் வழக்கம்போல் முழு கட்டணத்தைச் செலுத்த வேண்டும். விலை குறைப்பு நடவடிக்கை Bas.My சேவை உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் விரிவுபடுத்தப்படும் என்று அவர் விளக்கினார்.




