சுபாங், நவம்பர் 3 -மாட்சிமை தங்கிய பேரரசர் சுல்தான் இப்ராஹிம் அவர்கள் இன்று காலை சவூதி அரேபியாவிற்கு அரசுமுறை பயணமாக புறப்பட்டார். நவம்பர் 3 முதல் 6 வரையான இப்பயணம், மலேசியா மற்றும் பல நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தும் முயற்சியின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கம் மக்களும் நாடும் பெறும் நன்மையை உயர்த்துவதாகும்.
மேலும் இன்றைய பயணம் வரலாற்று சிறப்புடையது. 1984ஆம் ஆண்டு மறைந்த சுல்தான் ஹாஜி அஹ்மத் ஷா அல்-முஸ்தைன் பில்லா அவர்களின் சவூதி அரேபியா பயணத்திற்குப் பிறகு, மலேசிய பேரரசரின் முதல் அரசுமுறை பயணமாக இது அமைந்துள்ளது. மாமன்னரை ஏற்றுச் சென்ற சிறப்பு விமானம் இன்று காலை 9 மணிக்கு மலேசிய அரச விமானப்படை தளத்திலிருந்து புறப்பட்டது. இந்த பயணத்தில் மன்னருடன் அவரது புதல்வர்களும் உடன் சென்றுள்ளனர்.
சவூதி பயணத்திற்குப் பின், மன்னர் அவர்கள் பஹரைனின் மன்னர் ஹம்மாத் இப்னு ஈசா அல்-கலீபாவின் அழைப்பின் பேரில் பஹரைனுக்குச் செல்கின்றார். 1974ஆம் ஆண்டு மலேசியா மற்றும் பஹரைன் இடையிலான தூதரக உறவுகள் நிறுவப்பட்டதிலிருந்து இது முதல் அரசுமுறை பயணமாகும்.




