இந்தியா, நவ 3 - நேற்று இந்தியாவின் மிக அதிக எடைகொண்ட தகவல் தொடர்பு செயற்கைக்கோளான (சி.எம்.எஸ்-03)ஐ, தனது எல்.வி.எம்3-எம்5 ராக்கெட் மூலம் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெற்றிகரமாக விண்ணில் பாய்ச்சியது.
நேற்று மாலை 5:26க்கு, ஆந்திரப் பிரதேசத்தில் உள்ள சதிஷ் தவான் விண்வெளி மையத்திலிருந்து 4.4 டன் எடை மற்றும் 43.5 மீட்டர் உயரமுள்ள அந்த செயற்கைக்கோள் விண்ணில் பாய்ந்தது.
இந்தச் செயற்கைக்கோள் சுமார் 20 நிமிடப் பயணத்திற்குப் பிறகு, 180 கிமீ உயரத்தை அடைந்து, புவி ஒத்திசைவுப் பரிமாற்ற சுற்றுப்பாதை, ஜி.தி.ஓவில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டது.
சி.எம்.எஸ்-03 செயற்கைக்கோள் தகவல் தொடர்புக்காகவும் இந்திய கடற்பரப்பு உள்ளிட்ட கடல் வட்டாரங்களைக் கண்காணிக்கவும் பயன்படும் என்று இந்திய தற்காப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும், இந்த செயற்கைக்கோள் விண்வெளி அடிப்படையிலான தொடர்புகளை வலுப்படுத்துவதோடு, இந்தியாவின் கடல்சார் பாதுகாப்பு திறனை கணிசமாக வலுப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதில் குறிப்பாக கப்பல்கள், விமானங்கள், நீர்மூழ்கிக் கப்பல்கள் மற்றும் கடற்படையின் கடல்சார் நடவடிக்கை மையங்களுக்கு இடையே பாதுகாப்பான தொடர்பு இணைப்புகளை அது உருவாக்கும் என்றும் நம்பப்படுகிறது.
பெர்னாமா




