புத்ராஜெயா, நவம்பர் 3 — மலேசியாவில் 18 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் மொத்தம் 9.03 மில்லியன் பேர் உள்ளனர். இது நாட்டின் மொத்த மக்கள் தொகையான 34.23 மில்லியனில் 26.4 சதவீதமாகும் என்று புள்ளியியல் துறை இன்று வெளியிட்ட “மலேசியா குழந்தைகள் புள்ளிவிவரங்கள் 2025” அறிக்கையில் தெரிவித்துள்ளது.
இக் குழந்தைகளில் 4.66 மில்லியன் ஆண்கள், 4.37 மில்லியன் பெண்கள் எனவும், 5 வயதிற்குக் குறைந்த குழந்தைகள் மட்டும் 2.31 மில்லியன் என முதன்மை புள்ளியியல் அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் உசிர் மஹிடின் தெரிவித்தார்.
18 வயதுக்குக் குறைந்த குழந்தைகள் அதிக சதவீதம் (39.9%) கொண்ட மாநிலமாக புத்ராஜெயா பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து கிளந்தான் (33.5%) மற்றும் திரங்கானு (32.9%) இடம் பெற்றுள்ளன.
“குழந்தைகள் எண்ணிக்கையில் சிலாங்கூர் மாநிலம் 1.81 மில்லியன் குழந்தைகளுடன் முதலிடத்தில் உள்ளது. அதேவேளையில் லாபுவான் 0.03 மில்லியன் மிகக் குறைந்த குழந்தைகளை கொண்டுள்ளது,” என்று அவர் அறிக்கையில் தெரிவித்தார்.
மேலும் சுகாதார துறையில், 2024ஆம் ஆண்டு குழந்தைகள் தடுப்பூசி அளவு குறைந்துள்ளதாகவும், ஐந்து முக்கிய தடுப்பூசிகளிலும் வீழ்ச்சி ஏற்பட்டதாகவும் கூறப்பட்டது. பதிவு செய்யப்பட்ட குழந்தைகள் பராமரிப்பு மையங்கள் (TASKA) 2024ஆம் ஆண்டு 1.4 சதவீதம் அதிகரித்து 3,198 மையங்களாக உயர்ந்துள்ளன.
இதனுடன், குற்றச்செயலில் ஈடுபட்ட குழந்தைகள் எண்ணிக்கை 4.2 சதவீதமாக குறைந்து 2,627 வழக்குகளாக குறைந்துள்ளது.




