காபூல், நவ 3- வடக்கு ஆப்கானிஸ்தானில் உள்ள மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு அருகில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட 6.3 ரிக்டர் அளவிலான சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் குறைந்தது 10 பேர் உயிரிழந்தனர் மற்றும் சுமார் 150 பேர் காயமடைந்தனர் என்று மாகாண அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.
இந்த நிலநடுக்கம் மசார்-இ-ஷெரீஃப் நகருக்கு அருகில் 28 கிலோமீட்டர் (17.4 மைல்) ஆழத்தில் ஏற்பட்டது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சுமார் 5,23,000 மக்கள் வசிக்கும் நகரமாகும் மசார்-இ-ஷெரீஃப். நிலநடுக்கத்தால் ஏழு பேர் பலியாகி 150 பேர் காயமடைந்துள்ளதாகவும், அவர்கள் சுகாதார மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும், மசார்-இ-ஷெரீஃபுக்கு அருகிலுள்ள சமங்கன் என்ற வடக்கு மலைப் பிரதேசத்தின் சுகாதாரத் துறை செய்தித் தொடர்பாளர் சமிம் ஜோயண்டா தெரிவித்தார்.
அண்மையில், ஆகஸ்ட் 31 அன்று நாட்டின் கிழக்குப் பகுதியில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது 2,200 க்கும் அதிகமானோரைக் கொன்றது. இதுவே ஆப்கானிஸ்தானின் மிக மோசமான நிலநடுக்கமாகப் பதிவாகியுள்ளது.




