கோலாலம்பூர், நவம்பர் 3 – டீசல் மற்றும் பூடி மடாணி மானியங்களில் தற்போது நடைமுறைப்படுத்தியது போல், சர்க்கரை, அரிசி, மற்றும் சமையல் எண்ணெய் போன்ற பிற மானியப் பொருட்களுக்கு இலக்கிடப்பட்ட மானிய உதவித் திட்டத்தை படிப்படியாகவும், கட்டங்களாகவும் செயல்படுத்த அரசாங்கம் ஆய்வு செய்து வருவதாக நிதி துணையமைச்சர் லிம் ஹுய் யிங் இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
மானியம் உண்மையாகத் தேவைப்படுவோரை மட்டுமே சென்றடைவதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம் என்று அவர் கூறினார்.
இப்போதைக்கு, எரிபொருள் மானிய திட்டத்தை வெற்றிகரமாகச் செயல்படுத்தி, அதை விரிவான மானிய இலக்குத் திட்டங்களுக்கான அடிப்படையாக அமைப்பதே அரசாங்கத்தின் முன்னுரிமை என்றும் அவர் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், நாட்டின் முதன்மைத் தரவுத்தள அமைப்பான பாடுவில் மலேசியக் குடிமக்கள் மற்றும் நிரந்தர குடியிருப்பாளர்களின் 30.4 மில்லியன் தனிப்பட்ட மற்றும் குடும்ப விவரங்கள் உள்ளதாகப் பொருளாதாரத் துறை துணை அமைச்சர் ஹனிஃபா ஹாஜர் தாய்ப் தெரிவித்தார்.
அத்துடன், அக்டோபர் 31, 2025 நிலவரப்படி, பூடி 95 போன்ற கொள்கை உருவாக்கம் மற்றும் திட்டங்களுக்காக பாடு தரவைப் பயன்படுத்த 17 விண்ணப்பங்கள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், பாடு தரவைப் பயன்படுத்த அங்கீகரிக்கப்பட்ட மற்ற நிறுவனங்களில் பொதுப்பணி அமைச்சகம், தேசிய இலக்கவியல் துறை மற்றும் உயர்கல்வி அமைச்சகம் ஆகியவை அடங்கும் என்றும் அவர் பதிலளித்தார்.




