தாவாவ், நவ 3 - எதிர்வரும் 17வது சபா மாநிலத் தேர்தலின் போது, 10,000 அரச மலேசியக் காவல்துறை படையின் உறுப்பினர்கள் பணியமர்த்தப்படுவார்கள் என உள்துறை அமைச்சர் டத்தோ ஸ்ரீ சைஃபுடின் நசுத்தியோன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
வேட்புமனு தாக்கல் தொடங்கி நவம்பர் 29 ஆம் தேதி வாக்களிப்பு நாள் வரை, ஜனநாயக செயல்முறையின் பாதுகாப்பு மற்றும் சுமுகமான நடைமுறையை உறுதி செய்வதற்காக அவர்கள் பணியில் ஈடுபடுவார்கள் என்று அவர் கூறினார்.
தேர்தல் காலம் முழுவதும், பணியில் இருப்பவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டால், சரவாக் மாநிலக் காவல்துறை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று அவர் தெரிவித்தார்
வாக்காளர்களின் பாதுகாப்பை மட்டுமல்ல, சபா தேர்தலில், ஜனநாயகம் சரியான முறையில் செயல்படுவதை உறுதி செய்வதும் காவல்துறையினர் கடமை ஆகும் என்றார் அவர்.
"வாக்காளர்கள் தங்கள் கடமையை நிறைவேற்ற வெளியே செல்வதில் சௌகரியமாக உணர வேண்டும். பாதுகாப்பு கண்ணோட்டத்தில் எந்த கவலையும் இருக்கக்கூடாது, அச்சுறுத்தல்கள், மிரட்டல்கள் ஆகியவற்றைக் களைவது காவல்துறையின் அத்தியாவசிய கடமைகள்," என்றார் அவர்.
உள்துறை அமைச்சின் மடாணி நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட பின்னர் அவர் செய்தியாளர்களைச் சந்தித்த போது இவ்வாறு கூறினார்.
பெர்னாமா




