அம்பாங் ஜெயா, நவ 3 : அடுத்து ஆண்டுக்கான சிலாங்கூர் பட்ஜெட்டில் முதியோர் நலனுக்கும் அடிப்படை வசதிகளின் மேம்பாட்டிற்கும் முக்கியத்துவம் வழங்க வேண்டும் என்று தெரத்தாய் மாநில சட்டமன்ற உறுப்பினர் யூ ஜியா ஹாவ் கூறினார்.
மலேசியாவில் தற்போது முதியோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், ஸ்கிம் மெஸ்ரா ஊசிய எமாஸ் (SMUE) போன்ற மாநில நலத்திட்டங்களை மேம்படுத்தி, முதியோருக்கு அதிக உதவி வழங்க வேண்டும் என்றார்.
“என் பகுதியில் இன்னும் பல முதியவர்கள் ஸ்கிம் மெஸ்ரா ஊசிய எமாஸ் திட்டத்திற்கு பதிவு செய்ய முடியவில்லை. ஏனெனில், பதிவு மீண்டும் திறக்கப்படவில்லை. முதியவர்கள் பயனடையும் வகையில், கூடுதல் இட ஒதுக்கீடு வழங்கி, இது போன்ற திட்டங்களை அரசு தொடர வேண்டும்,” என அவர் கேட்டு கொண்டார்.
அவர் இன்று தாமான் மெலாவத்தியில் நடைபெற்ற அம்பாங் ஜெயா நகராண்மை கழகத்தின் தன்னார்வ உள்ளூர் மதிப்பீட்டு அறிக்கையின் (VLR) வெளியீட்டுக்கு பிறகு யூ ஜியா இவ்வாறு கூறினார்.
தெரத்தாய் ஒரு பழமையான பகுதி என்பதால், பல சாலைகள் மற்றும் பொதுவசதிகளுக்கு பழுதுபார்ப்பு மற்றும் மேம்பாடு பணிகள் தேவைப்படுகின்றன என அவர் தெரிவித்தார்.
“பல சாலைகள் 40 ஆண்டுகளுக்கு முன் அமைக்கப்பட்ட வடிவமைப்பில் உள்ளன. மக்கள் மற்றும் வாகனங்கள் அதிகரித்துள்ளதால், சில சாலைகளை விரிவுபடுத்தி மாற்றம் செய்ய வேண்டும். இதனால் மக்கள் பாதுகாப்பாகவும் வசதியாகவும் வாழ முடியும்,” என்றார்.
2026 சிலாங்கூர் பட்ஜெட், கூட்டாட்சி அரசின் கொள்கைகளுடன் இணங்க வேண்டும், ஏனெனில், சிலாங்கூர் நாட்டின் மிக முன்னேற்றமான மாநிலமும் முக்கிய முதலீட்டு மையமும் ஆகும்.
2026 சிலாங்கூர் பட்ஜெட் நவம்பர் 14 அன்று மாநில சட்டமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.




