ஷா ஆலம், நவ 3: நாடு முழுவதும் 428,027 ஆசிரியர்கள் 2025 மடாணி ஆசிரியர் புத்தக வவுச்சரை (Baucar Buku Guru MADANI 2025) முழுமையாக பயன்படுத்தியுள்ளனர். இத்திட்டம் கடந்த 31 அக்டோபர் அன்று 100 சதவீதப் பயன்பாட்டை எட்டியுள்ளது.
இந்த சாதனை, 2025 கோலாலம்பூர் சர்வதேச புத்தகக் கண்காட்சியில் (PBAKL) பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்த தேசிய வாசிப்பு திட்டத்திற்கு ஆசிரியர்கள் அளித்த மிகுந்த ஆதரவை காட்டுகிறது.
இத்திட்டம் மலேசியக் கல்வி அமைச்சகம் மற்றும் கோத்தா புத்தகக் கழகம் (Perbadanan Kota Buku – PKB) இணைந்து ``Book Capital`` தளத்தின் மூலம் செயல்படுத்தப்பட்டது.
இந்த திட்டத்தின் கீழ், ஒவ்வொரு ஆசிரியருக்கும் RM100 மதிப்புள்ள மின்வவுச்சர் வழங்கப்பட்டது. இது தொழில்முறை, கல்வி மற்றும் பொதுவான புத்தகங்களை டிஜிட்டல் முறையில் வாங்க பயன்படுத்தப்பட்டுள்ளது.
மேலும், 428,027 கல்விச் சேவை அதிகாரிகளும் (PPP) தங்களது வவுச்சர்களை மீட்டுள்ளனர். புத்தக வாங்கும் விகிதமும் கடந்த ஆண்டின் 89 சதவீதத்திலிருந்து 99.74 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், 670 உள்ளூர் பதிப்பகங்கள் மற்றும் விற்பனையாளர்களின் பங்களிப்புடன் 238,186 தலைப்புகளை கொண்ட 1.5 மில்லியனுக்கும் மேற்பட்ட புத்தகங்கள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
இந்த வெற்றி ஆசிரியர்களின் அறிவை விரிவுபடுத்தும் மனப்பாங்கையும் வாசிப்பு கலாச்சாரத்தையும் காட்டுகிறது என PKB தலைமை நிர்வாக அதிகாரி அடிபா ஓமார் தெரிவித்தார்.
“இந்த 100% வெற்றி ஒரு எண் மட்டுமல்ல, இது டிஜிட்டல் அமைப்பின் திறனையும், மலேசியக் கல்வி அமைச்சின் மற்றும் உள்ளூர் துறைகளின் ஒத்துழைப்பையும் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.




