ஷா ஆலம், நவம்பர் 3 - பிரபல இணைய விளையாட்டான ‘Roblox’ மற்றும் ‘UMI’ ஆகியவற்றைத் தடை செய்வதை அரசு பரிசீலித்து வருவது சரியான நடவடிக்கை என சிலாங்கூர் மாநில இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் மேம்பாட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு நஜ்வான் ஹலிமி தெரிவித்தார்.
வன்முறை மற்றும் எதிர்மறை கூறுகளை கொண்ட இணைய விளையாட்டுகள் இளைஞர்கள் மற்றும் சிறுவர்களை தவறான பாதைக்கு இட்டுச் செல்லும் அபாயம் உள்ளதால், அவற்றைத் தடுக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய நேரம் இது என அவர் கூறினார்.
“இந்த நடவடிக்கையை நான் வரவேற்கிறேன். அரசாங்கம் இப்போது உறுதியான முடிவெடுத்து, Roblox போன்ற குழந்தைகளுக்கு தீய விளைவுகளை ஏற்படுத்தும் விளையாட்டுகளைத் தடை செய்ய வேண்டும். Roblox மட்டும் அல்ல, இதேபோன்ற பிற இணைய விளையாட்டுகளிலும் உள்ள வன்முறை கூறுகள் மற்றும் மனநிலையை பாதிக்கும் உள்ளடக்கங்களை அரசு கவனமாக ஆய்வு செய்ய வேண்டும்,” என அவர் மீடியா சிலாங்கூரிடம் தெரிவித்தார்.
அதே நேரத்தில், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் இணையப் பயன்பாடுகளை அதிக கவனத்துடன் கண்காணிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். இது இளைஞர்களின் பாதுகாப்பு மற்றும் மனப்போக்கை பாதிக்கும் உள்ளடக்கங்கள் குறித்த அச்சத்தினால் எடுக்கப்பட்ட நடவடிக்கையாகும். இப்போதைய நிலையில், இச்செய்தி இன்னும் ஆலோசனைக்கட்டத்தில் உள்ளது என்றும், இறுதி முடிவு ஆஸ்திரேலியாவின் Roblox மீது டிசம்பரில் அமல்படுத்தப்படவுள்ள புதிய விதிகளைக் கருத்தில் கொண்டு எடுக்கப்படும் என்றும் அவர் கூறினார்.




