பந்திங், நவம்பர் 2 — இந்தியச் சிலாங்கூர் தொழில் முனைவோர் மேம்பாடு ஐ-சிட் (I-Seed) திட்டம் பல தொழில் முனைவோர் தங்கள் வருமானத்தை அதிகரிக்க உதவியுள்ளது என மனிதவள மற்றும் வறுமை ஒழிப்பு ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பாராய்டு வீரமான் தெரிவித்தார்.
"ஐ-சிட் ஒதுக்கீட்டில் இன்று பந்திங் சட்டமன்றத் தொகுதியின் தீபாவளி திறந்த இல்ல உபசரிப்பில் கோலா லங்காட்டைச் சார்ந்த 19 மக்களுக்கு ஐ-சிட் காசோலை மற்றும் இயந்திரங்கள் வழங்கப்பட்டது. இதன் மொத்த தொகை RM105,299 ஆகும்.
இந்தியர்கள் நடத்தும் தொழிலுக்கு ஏற்ப உபகரண உதவி வழங்குவது அவர்களின் பொருளாதார நிலையை மேம்படுத்தும் என்ற நோக்கத்திற்காக ஐ-சீட் திட்டம் தொடங்கப்பட்டது. அந்த உதவி கொடுப்பதற்கான தகுதிகள், ஒருவர் சிலாங்கூர் குடிமக்களாக இருக்க வேண்டும் அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக சிலாங்கூரில் வசிப்பவர்களாக இருக்க வேண்டும், தனிநபர் மற்றும் குடும்ப வருமானம் மாதத்திற்கு RM3,000 க்கும் குறைவாக உள்ளவர்கள் மற்றும் வணிகம் சிலாங்கூர் மாநிலத்தில் செயல்பட வேண்டும்.
கூடுதலாக, வணிகம் சீரானதாகவும் இருக்க வேண்டும். மேலும், விண்ணப்பதாரர் அல்லது அவரின் துணையார் (கணவன்/மனைவி) சிலாங்கூர் மாநில வறுமை ஒழிப்பு புளூபிரிண்ட் உதவித் திட்டம் அல்லது சிலாங்கூர் சிறுதொழில் முனைவோர் நிதித் திட்டத்தின் கீழ் உபகரண உதவியைப் பெற்றிருக்க கூடாது.




