புத்ராஜெயா, நவம்பர் 2: நாட்டில் இன்ஃப்ளூயன்சா விகிதம் கடந்த அக்டோபர் 19 முதல் 25 வரை பதிவான 43வது தொற்றுநோய் வாரத்தில் குறைந்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
சுகாதார அமைச்சு இன்று வெளியிட்ட அறிக்கையில், இன்ஃப்ளூயன்சா போன்ற நோய்களுக்கு (ILI) ஆலோசனை பெறும் விகிதமும், தீவிர சுவாச தொற்று (SARI) காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் விகிதமும் முந்தைய வாரத்துடன் ஒப்பிடுகையில் குறைந்துள்ள்து என்று கூறியுள்ளது.
“ILI ஆலோசனை விகிதம் 9.68 சதவீதத்திலிருந்து 8.18 சதவீதமாகவும், SARI விகிதம் 10.56 சதவீதத்திலிருந்து 10.45 சதவீதமாகவும் குறைந்துள்ளது,” என்று அமைச்சு தெரிவித்துள்ளது.
மேலும் சுவாச நோய் கிளஸ்டர்கள் அதிகம் பதிவான இடங்கள் பள்ளிகள், தனியார் வீடுகள், ஆரம்பபள்ளிகள், பொது இடங்கள், மற்றும் குழந்தைகள் பராமரிப்பு மையம் ஆகும். இன்ஃப்ளூயன்சா வைரஸால் பாதிக்கப்பட்ட பெரும்பாலானவர்கள் சில நாட்கள் அல்லது ஒரு வாரத்திற்குள் முழுமையாக குணமடைந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்தது. ஆனால், குழந்தைகள், முதியவர்கள் மற்றும் நீண்டகால நோய்கள் கொண்டவர்கள் போன்ற உயர் அபாயக் குழுக்களில் இத்தொற்று கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும் என்றும் எச்சரித்துள்ளது.
அதனால், சுகாதார அமைச்சு மக்கள் அனைவரையும் குறிப்பாக உயர் அபாயக் குழுவினரைக் கவனமாக இருக்குமாறு அறிவுறுத்துகிறது. காய்ச்சல் அல்லது சளி போன்ற அறிகுறிகள் இருந்தால் பொதுமக்கள் கூடும் இடங்களுக்கு செல்லாமல் இருக்கவும், முகமூடி அணியவும், கைகளை அடிக்கடி கழுவவும், ஆண்டுதோறும் இன்ஃப்ளூயன்சா தடுப்பூசி எடுக்கவும் பரிந்துரைக்கப்படுகிறது.




