கோலாலம்பூர், நவ 1- படிவம் ஐந்து மாணவர்களுக்கான எஸ்.பி.எம் பொதுத்தேர்வு எதிர்வரும் நவம்பர் 3 ஆம் தேதி முதல் ஆரம்பமாகவுள்ளது. நாடளாவிய ரீதியில் 3,350 தேர்வு நிலையங்களில் மொத்தம் 413,372 மாணவர்கள் 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வுக்கு பதிவு செய்துள்ளனர்.
மலேசியக் கல்வி அமைச்சின் தகவலின்படி, நவம்பர் 3ஆம் தேதி தொடங்கும் இந்தத் தேர்வின் நிர்வாகம் மற்றும் ஏற்பாடுகளின் சீரான ஓட்டத்தை உறுதிப்படுத்த 127,526 தேர்வு பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, எஸ்.பி.எம் தேர்வுக்கான கால அட்டவணையைப் பார்த்துக் கொள்ளுமாறு கல்வி அமைச்சு அனைத்து மாணவர்களையும் அறிவுறுத்தியுள்ளது.
தேர்வு நடைபெறும் தேதி, நேரம், தாள் குறியீடு, தாளின் பெயர் மற்றும் தேர்வு முழுவதும் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் பற்றிய தகவல்களை மாணவர்கள் இந்தக் கால அட்டவணை-யில் பெறலாம். 2025 ஆம் ஆண்டுக்கான எஸ்.பி.எம் தேர்வு கால அட்டவணையை, தேர்வு வாரியத்தின் (LP) அதிகாரப்பூர்வ இணையத்தளமான lp.moe.gov.my என்ற இணைப்பிலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
தேர்வு நிலையங்களுக்கு செல்லும் போது அடையாள ஆவணத்தையும் தேர்வுப் பதிவு அறிக்கையையும் கொண்டு செல்ல வேண்டும் என்றும், தேர்வைச் சீராக நடத்த, நடைமுறைத் தரநிலை செயல்முறைகள் மற்றும் விதிமுறைகளை மாணவர்கள் பின்பற்ற வேண்டும் என்றும் கல்வி அமைச்சு மீண்டும் வலியுறுத்தியுள்ளது.




