கியோங்ஜூ, அக் 31 - ஆசிய பசிபிக் பொருளாதார கூட்டமைப்பின் (ஏபெக்) உறுப்பு நாடுகள் தங்கள் செயல்பாட்டை விரிவுப்படுத்தி லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளின் பொருளாதாரத்தில் அதிக பங்கேற்பை ஊக்குவிக்கும் பாலமாகச் செயல்பட வேண்டும் என பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அழைப்பு விடுத்துள்ளார்.
இன்று தென் கொரியா கியோங் ஜூவில் நடைபெற்ற ஏபெக் பொருளாதாரத் தலைவர்கள் கூட்டத்தின் கலந்துரையாடல் சந்திப்பில் அன்வார் இப்ராஹிம் இத்தகவலைப் பகிர்ந்து கொண்டார்.
"இந்த நடவடிக்கை உலகின் வடக்கு மற்றும் தெற்கு வட்டாரங்கள் இடையிலான இடைவெளியைக் குறைக்கும் ஒரு சமமான பொருளாதார கட்டமைப்பை நோக்கிய பாதையை அமைக்கும்." என்று பிரதமர் தெரிவித்தார்.
இந்த அமைப்பு தம்மை ஒரு முன்னோடியாக நிரூபித்துள்ளதோடு தன்னார்வ மற்றும் கட்டாயமற்ற ரீதியில் உலக பொருளாதார விதிமுறைகளை வடிவமைப்பதில் ஊக்கமளித்து வருவதாக அன்வார் விவரித்தார்.
உலக வர்த்தக அமைப்புக்கு பின்னர் ஏற்றுக்கொள்ளப்பட்ட பன்முக ஒத்துழைப்பு முயற்சிகளுக்கு ஏபெக் முன்னோடியாக இருந்து வர்த்தக வசதிக்கான ஆரம்பகால கட்டமைப்புகளை உருவாக்கியது குறிப்பிடத்தக்கது.
மேலும், சுற்றுச்சூழலுக்கு உகந்த வரிகளைத் தன்னார்வமாகக் குறைப்பதிலும் அது உலகிற்கு முன்மாதிரியாகத் திகழ்ந்தது.
--பெர்னாமா






