குவா மூசாங், அக் 31 — ஃபெல்டா அரிங் 8 மரம் வெட்டும் தளத்தின் வீட்டு பகுதியில், காட்டு யானைகள் கூட்டத்தால் தாக்கப்பட்டதாக நம்பப்படும் ஒரு மரம் வெட்டும் ஊழியர் உயிரிழந்தார்.
மரணமடைந்தவர் சைடி ஜஹாரி (43) என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் அப்பகுதியை விட்டு வெளியேறும் வழியில், காட்டு யானைகள் மிதித்ததால் கடுமையான காயங்களுடன் உயிரிழந்ததாக நம்பப்படுகிறது.
நேற்று காலை 8.15 மணியளவில் சம்பவம் குறித்த புகார் பெறப்பட்டதாக குவா மூசாங் மாவட்ட போலீஸ் தலைமை அதிகாரி சூப்ரிண்டெண்டன் சிக் சூன் ஃபூ தெரிவித்தார். முதல் கட்ட விசாரணையில், ஆறு தொழிலாளர்கள் முகாமில் தூங்கிக் கொண்டிருந்தபோது, திடீரென காட்டு யானைகளின் வாசனை மற்றும் சத்தம் கேட்டதால் அனைவரும் காட்டுக்குள் தப்பி ஓடினர். ஆனால் சைடி தப்பிக்க முடியவில்லை என அவர் கூறினார்.
சில மணி நேரங்கள் கழித்து முகாமிற்கு திரும்பியபோது, சைடி இரு கால்களிலும் கடுமையான காயங்களுடன் உயிரிழந்த நிலையில் காணப்பட்டார்.
சைடியின் உடல் மேல் பரிசோதனைக்காக குவா மூசாங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டது. இதேவேளை, வனவிலங்கு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் சம்பவத்தை அறிந்து, சம்பந்தப்பட்ட காட்டு யானைகளின் கூட்டத்தின் இயக்கத்தைக் கண்காணித்து வருகின்றனர்.




