ஷா அலாம், அக் 31 — லோரோங் பத்து நீலாம் 21B மற்றும் பண்டார் புக்கிட் திங்கி 2 பகுதிகளில் உள்ள ஒன்பது உணவகங்கள், உரிமச் சட்ட நிபந்தனைகள் மற்றும் பொது சுகாதார விதிமுறைகளை மீறியதற்காக நடவடிக்கைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளன.
இந்தச் சோதனை நடவடிக்கை உரிமப் பிரிவு, அமலாக்கப் பிரிவு மற்றும் எம்பிடிகே சுகாதாரப் பிரிவு ஆகியவை இணைந்து, இண்டா வாட்டர் கன்சார்டியம் (IWK) மற்றும் தேசிய நீர் சேவை ஆணையம் (SPAN) ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்டது என கிள்ளான் அரச மாநகர் மன்றம் தெரிவித்தது.
“இச்சோதனையின் முடிவில், 9 உணவகங்கள் உரிம நிபந்தனைகளைப் பின்பற்றத் தவறியதாக தெரியவந்தது. அவை எண்ணெய் வடிகட்டியை பராமரிக்காதது, உணவு கழிவுகளை பின்வாசலில் கொட்டியது, சமையல் எண்ணெயை பொது இடங்களில் கொட்டியது மற்றும் நடைபாதையை மறித்தது போன்ற குற்றங்களில் ஈடுபட்டிருந்தன,” என அந்த மன்றம் தனது முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.
சம்பந்தப்பட்ட உணவக உரிமையாளர்களுக்கு உரிம விதிகளை மீறியதற்கும், உணவு கழிவுகள் மற்றும் சமையல் எண்ணெயை சரியாக நிர்வகிக்கத் தவறியதற்கும் மொத்தம் 10 அபராதங்கள் விதிக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி, இதுபோன்ற அமலாக்க நடவடிக்கைகள் தொடர்ந்து வலுப்படுத்தப்படும் என்றும், நகரின் சுத்தம் மற்றும் ஆரோக்கியமான சூழலை நிலைநிறுத்துவது உறுதி செய்யப்படும் என்றும் அந்த மன்றம் தெரிவித்துள்ளது.




