பத்து பஹாட், அக் 31- பத்து பஹாட்டில் கழுத்தில் கத்தியால் வெட்டப்பட்டுப் பலத்த காயமடைந்த ஆறு வயதுச் சிறுவன் தொடர்பான வழக்கில், காவல்துறையினர் அச்சிறுவனின் சகோதரரிடம் வாக்குமூலத்தைப் பதிவு செய்துள்ளனர்.
அச்சிறுவனின் சகோதரர் தற்போது சமூகநலத் துறையின் மேற்பார்வையில் உள்ளார். பாதிக்கப்பட்ட சிறுவனின் பெற்றோர் இரண்டு நாட்களுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
தாக்குதலுக்குக் காரணம் ஒரு பிரபலமான இணையவழி விளையாட்டின் தாக்கம் இருக்கலாம் என்று ஜொகூர் காவல்துறைத் தலைவர் டத்தோ அப்துல் ரஹ்மான் அர்சாட் சந்தேகம் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட சிறுவன் கைப்பேசியைச் சேதப்படுத்தியதால், விளையாட்டில் சேர்த்த ஒரு மில்லியன் புள்ளிகளைச் சிறுவனின் அண்ணன் இழந்ததாலும், அவருக்கு இரவில் மாயத்தோற்றம் போன்ற உணர்வுகள் ஏற்பட்டிருக்கலாம் என்றும் காவல்துறை தெரிவித்துள்ளது.
விசாரணையை நிறைவு செய்வதற்காகச் சிறுவனின் சகோதரரிடம் வாக்குமூலம் பெறப்பட்டதாகப் பத்து பஹாட் மாவட்டக் காவல் துறைத் தலைவர் துணை ஆணையர் ஷாருலானுவார் முஷட்டாட் அப்துல்லா சானி கூறினார்.




