கோலாலம்பூர், அக் 31 — போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறை (JSPT) வழங்கும் 70 சதவீத போக்குவரத்து அபராதத் தொகை குறைப்பு திட்டம், சமரசம் செய்ய முடியாத (NC) குற்றங்களுக்கு பொருந்தாது என்று புகிட் அமான் இயக்குநர் டத்தோ ஸ்ரீ முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.
இத்திட்டம் நவம்பர் 1 முதல் டிசம்பர் 30 வரை நடைபெறும். இந்த தள்ளுபடியில் குறைந்தபட்ச கட்டணம் RM30ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
“அபராதங்களைச் செலுத்துவது MyDigital IDஇல் பதிவு செய்யப்பட்ட பயனர்களுக்கான MyBayar PDRM தளத்தின் மூலம் அல்லது நாடு முழுவதும் உள்ள போக்குவரத்து மாவட்ட அலுவலகங்கள் மற்றும் அஞ்சலகக் கவுண்டர்களில் செய்யலாம்,” என்று அவர் ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.
காவல் துறை மற்றும் சாலைப் போக்குவரத்து துறையின் அபராதக் கட்டண விகிதங்கள் மற்றும் முறைகளை மறுசீரமைக்கும் அரசின் தீர்மானத்துடன் இந்த இயக்கம் இணைந்துள்ளது. இது 2026 ஜனவரி 1 முதல் “The Less You Delay, The Less You Pay” என்ற கொள்கையின் அடிப்படையில் அமலுக்கு வரும் என்று முகமட் யூஸ்ரி தெரிவித்தார்.
“அபராதத் தொகையை முன்னதாகச் செலுத்தினால் மக்கள் குறைந்த கட்டணத்தை செலுத்தும் வாய்ப்பு பெறுவர்,” என்றார் அவர்.
மேலும், பொறுப்பான மற்றும் பாதுகாப்பான ஓட்டுநர் பண்பாட்டை உருவாக்க அரசு வழங்கியுள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்தி பொதுமக்கள் டிசம்பர் 30க்கு முன் அபராதங்களைத் செலுத்துமாறு ஊக்குவித்தார்.




