கோலாலம்பூர், அக் 31 - கடந்த செப்டம்பர் 30ஆம் தேதி அமல்படுத்தப்பட்ட BUDI MADANI RON95 பெட்ரோலுக்கான இலக்கிடப்பட்ட உதவித் தொகை தொடர்பில் பினாங்கு மாநில உள்நாட்டு வாணிப மற்றும் வாழ்க்கைச் செலவின அமைச்சு ஒன்பது புகார்களைப் பெற்றுள்ளது.
அந்த எண்ணிக்கையில் பெட்ரோல் நிலையங்களில் நிரப்பப்படும் பெட்ரோலின் அளவு குறைவு எனும் புகார்கள் மட்டுமே அமைச்சின் அதிகார வரம்பிற்கு உட்பட்டிருப்பதாக அம்மாநிலத்தின் கே.பி.டி.என் இயக்குநர் எஸ். ஜெகன் தெரிவித்தார்.
"அளவு போதுமானதாக இல்லை என்று புகார்கள் பெறப்பட்டன. நாங்கள் எங்கள் அதிகாரிகளுடன் சென்று சோதனை செய்து அளவிட்டபோது அந்த அளவு சரியாக இருந்தது. அதாவது பெட்ரோல் மீட்டரில் காட்டப்பட்ட அளவும் சரியாக இருந்தது," என்று எஸ். ஜெகன் கூறினார்.
மேலும், பிற புகார்களில் தொழில்நுட்ப சிக்கல்களும் அடங்கும். உதாரணமாக, நுகர்வோர் தமது மைகாட் (MyKad) அட்டையை ஸ்கேன் செய்த பிறகு பம்ப் குழாயை பெட்ரோல் நிரப்பாமல் வைத்து விடுவதால் மானியப் பரிவர்த்தனை ரத்து செய்யப்பட்டு சில குளறுபடிகள் ஏற்படுகின்றன என்றார்.
இன்று புக்கிட் மின்யாக்கில் உள்ள பினாங்கு கே.பி.டி.என்னின் சேமிப்பு வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றின் போது ஜெகன் செய்தியாளர்களிடம் இதனை தெரிவித்தார்.
பெர்னாமா




