பெட்டாலிங் ஜெயா, அக் 30- ஊனமுற்ற ஆறு வயது சிறுவன் சேன் ராயன் அப்துல் மாட்டின் உடலில் காயங்கள் ஏற்படும் அளவிற்கு, அவனை புறக்கணித்ததாக சுமத்தப்பட்ட குற்றச்சாட்டிலிருந்து அச்சிறுவனின் தாயாரான இஸ்மனிரா அப்துல் மானாஃப் விடுவிக்கப்படுவரா, அல்லது குற்றவாளி என்று தீர்ப்புக்கு உட்படுத்தப்படுவாரா என்பது இன்று தெரியவுள்ளது.
கடந்த ஜூலை 21-ஆம் தேதி தொடங்கிய இவ்வழக்கு விசாரணையில், சிறார் உளவியல் மருத்துவ நிபுணர் டாக்டர் நோர் ஐஷா ரொஸ்லி, சேன் ராயன் தாத்தா சஹாரி முஹமட் ரேபா மற்றும் இஸ்மனிராவின் நெருங்கிய தோழியான உமி ஷாஃபிகா ரோஹிசால் ஆகியோரும் இவ்வழக்கின் சாட்சிகளாவர். மேலும் அச்சிறுவனின் தாயாரான இஸ்மனிராவிற்கு எதிரான போதிய முகாந்திரங்களை அரசு தரப்பு சமர்ப்பித்ததை அடுத்து, அவரை தற்காப்பு வாதம் புரியும்படி நீதிபதி ஷாலிசா கடந்த ஜூலை 21-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தார்.
பெட்டாலிங் ஜெயா செஷன்ஸ் நீதிமன்ற நீதிபதி டாக்டர் ஷாலிசா வார்னோ, தற்காப்பு வாதத்தின் முடிவை, இன்று காலை மணி 9 அளவில் வாசிப்பார் என்று அனைவராலும் எதிர்பார்க்கப்படுகின்றது.




