கோலாலம்பூர், அக் 30- 47வது ஆசியான் உச்சிமாநாடும் அதனுடன் தொடர்புடைய கூட்டங்களும் நடைபெற்ற கடந்த அக்டோபர் 22 முதல் 29, 2025 வரை கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் (KLIA) முனையம் 1 மற்றும் 2, அத்துடன் சுல்தான் அப்துல் அஜிஸ் ஷா விமான நிலையம் (SZB) ஆகியவற்றில் அனைத்து வருகை மற்றும் புறப்பாடு நடவடிக்கைகளும் சீரான முறையில் நடைபெற்றதாக மலேசிய விமான நிலையங்கள் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் தெரிவித்துள்ளது.
அந்த எட்டு நாட்கள் காலகட்டத்தில், பிரதிநிதிகள் மற்றும் ஆதரவுக் குழுவினரைக் கொண்டு சென்ற விமானங்கள் உட்பட, 9,300க்கும் மேற்பட்ட விமானப் போக்குவரத்து மற்றும் 1.4 மில்லியன் பயணிகளின் நடமாட்டம் பதிவு செய்யப்பட்டது.
மாநாட்டிற்காக மொத்தம் 60 சிறப்பு மற்றும் வாடகைப் விமானங்கள், கே.எல்.ஐ.ஏ-வில் உள்ள பூங்கா ராயா வளாகம் (BRC) மற்றும் கூட்டு விமான முனையம் மூலம் கவனமாக நிர்வகிக்கப்பட்டன.இந்தச் சிறப்பு விமானங்கள் நிர்வகிக்கப்பட்ட போது, சாதாரண வணிக விமானங்களின் செயல்பாடுகள் பாதிக்கப்படவில்லை என்றும் MAHB உறுதிப்படுத்தியது.
இந்த நிகழ்விற்காக, விமான நிலைய செயல்பாடுகள், விமானப் போக்குவரத்து அதிகாரிகள் மற்றும் பல்வேறு அமைச்சகங்கள் மற்றும் அரசு நிறுவனங்களை உள்ளடக்கிய 24 பிரிவுகளைச் சேர்ந்த 70 அதிகாரிகளின் ஒரு மையக் குழு பல மாதங்களுக்கு முன்னரே தயார் நிலையில் இருந்தது.




