கோலாலம்பூர், அக் 30 - 47வது ஆசியான் உச்சி மாநாடு மற்றும் அதனுடன் தொடர்புடைய மாநாடுகளை மலேசியா வெற்றிகரமாக நடத்தியது அனைத்து மலேசியர்களுக்கும் பெருமையாக இருக்க வேண்டும் என பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார்.
இந்த சாதனை அரசியல் வேறுபாடுகள் இன்றி அனைவராலும் பாராட்டப்பட வேண்டும், மாறாக விமர்சனத்திற்கோ அல்லது பிளவிற்கோ காரணமாக இருக்கக்கூடாது என்றார்.
ஆசியானின் 11வது உறுப்பினராக திமோர் மற்றும் லெஸ்தெ இணைந்திருப்பது இம்முறை ஏற்பாடு செய்யப்பட்ட ஆசியான் மாநாட்டின் ஒரு பெரிய வெற்றியாகக் கருதப்படுகிறது.
மேலும், தாய்லாந்து மற்றும் கம்போடிய தலைவர்களால் கையெழுத்திடப்பட்ட கோலாலம்பூர் அமைதி ஒப்பந்தமும் இந்த மாநாட்டின் மற்றொரு சாதனை அடையாளம் என்று பிரதமர் தெரிவித்தார்.
அமெரிக்க அதிபரின் வருகையும் மலேசியா மீதான உலக கவனத்தை ஈர்க்க வழிவகுத்ததாக அவர் விவரித்தார்.
"அதிபர் டோனல்ட் டிரம்புடனான அமைதி மற்றும் வர்த்தக ஒப்பந்தத்திற்குப் பிறகு சீனப் பிரதமர் லி சியாங்கின் வருகையும் ஒரு பெரிய வெற்றியாகும்," என்று அன்வார் கூறினார்.
இன்று நடைபெற்ற மக்களைவைக் கூட்டத்தில் பிரதமர் இவ்வாறு கூறினார்.
இந்த சாதனை மற்ற ஆசியான் நாட்டுத் தலைவர்களின் உதவி மற்றும் பல அமைச்சுகளின் ஒத்துழைப்பின் வழி அடையப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
பெர்னாமா




