ஷா ஆலாம், அக் 30 - சிலாங்கூர் மாநில அரசு, அறிவிக்கப்படவுள்ள கொள்கைகள் மற்றும் நிதி ஒதுக்கீடுகள் மக்களுக்கு உண்மையாகப் பயனளிப்பதை உறுதி செய்வதற்காக, சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் 2026இன் முக்கிய அம்சங்களை இறுதி செய்வதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
சிலாங்கூர் மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்கள், அடுத்த ஆண்டுக்கான மாநில மேம்பாட்டுத் திசையை ஆராய்வதற்காக மாநிலச் செயலாளர், நிதியதிகாரி மற்றும் துறைத் தலைவர்களுடன் இறுதிப் பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகத் தெரிவித்தார்.
இந்த வரவு செலவுத் திட்டமானது, கல்வி மற்றும் வறுமை ஒழிப்பை அடிப்படையாகக் கொண்ட புதிய திட்டங்களைச் செயல்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்கும் என்றும், அத்துடன் வெள்ளப் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான மேம்பாட்டுத் திட்டங்களுக்கும் கவனம் செலுத்தும் என்றும் அவர் கூறினார்.
சிலாங்கூர் வரவு செலவுத் திட்டம் 2026, பொருளாதார வளர்ச்சிக்கும் மக்களின் நலனுக்கும் இடையேயான சமநிலையை வலியுறுத்தும் ஒரு விரிவான அணுகுமுறையுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று வலியுறுத்திய அமிருடின், இது மாநில அரசு ஊழியர்களுக்கும் அனைத்து சிலாங்கூர் மக்களுக்கும் மகிழ்ச்சியான செய்திகளைக் கொண்டு வரும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.
சிலாங்கூர் சட்டமன்றத்தில் வரவு செலவுத் திட்டம் 2026இன் உத்தியோகபூர்வ சமர்ப்பிப்பு வரும் நவம்பர் 14ஆம் தேதி நடைபெறும் என்று திட்டமிடப்பட்டுள்ளது.




