ஈப்போ, அக் 30- பேராக் மாநில அரசின் ஆதரவுடனும் ஏற்பாட்டிலும் முதல் முறையாகத் திருமுருகர் மாநாடு வரும் 16.11.2025 (ஞாயிற்றுக்கிழமை) அன்று கோப்பெங் கம்போங் கபாயாங் ஸ்ரீ சிவ சுப்பிரமணிய ஆலய மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
பேராக் மாநில சுகாதரம், இந்திய சமூக நலத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் அ.சிவநேசன் கூறுகையில் இந்த மாநாடு காலை 7.00 மணிக்குத் தொடங்கி மதியம் 1.00 மணிக்கு முடிவடையும் என்று அறிவித்தார்.
இம்மாநாடானது மலேசிய இந்து சங்கம், இந்து தர்ம மாமன்றம், இந்து அர்ச்சகர் சங்கம், ஈப்போ இந்து தேவஸ்தான பரிபாலன சபா உட்படப் பல்வேறு இந்து மற்றும் தமிழ்ப் பள்ளிகளின் தலைமையாசிரியர் கழகம் போன்ற பல இயக்கங்களின் ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
சுமார் 2 ஆயிரம் இந்து சமயத்தினர் கலந்துகொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படும் இந்த மாநாட்டில், சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படவுள்ளது. சிவஸ்ரீ முத்துக்குமர சிவாச்சாரியார், சிவஸ்ரீ டினேஸ் வர்மன் மற்றும் முனைவர் மு.சங்கரன் ஆகியோர் சிறப்புப் பேச்சாளர்களாகப் பங்கேற்பதுடன், டாக்டர் பண்பரசி குழுவினர் திருப்புகழைப் படைக்கவுள்ளனர்.
இளைஞர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையிலும், சமய விழிப்புணர்வை மக்களிடம் கொண்டு சேர்க்கும் அடிப்படையிலும் இம்மாநாடு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதால், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளையும் மாநாட்டிற்கு அழைத்து வர வரவேற்கப்படுவதாக அவர் கேட்டுக்கொண்டார்.
மேலும், ஆன்மீகப் பொருட்கள் மற்றும் உபகரணங்களை விற்பனை செய்ய ஆலய வளாகத்தில் அனுமதி வழங்கப்பட்டுள்ளதால், வியாபாரம் செய்ய விரும்புவோர் முத்துசாமியைத் தொடர்புகொள்ளலாம் என்றும் அவர் அறிவித்தார்.




