சிங்கப்பூர், அக் 30- சிங்கப்பூரின் பரபரப்பான யிஷூன் அவென்யூ 2 சாலையில் நடுவில் நின்று, தன்னை மோதிச் செல்லுமாறு வாகன ஓட்டிகளை சைகை மூலம் அழைத்த 53 வயதுடைய நபர் ஒருவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கைது செய்யப்பட்டார்.
மாலை 4.12 மணியளவில் நடந்த இந்த அதிர்ச்சியூட்டும் சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் வெளியானது. வெள்ளை கார் ஓட்டுநர் ஒருவர் அதிர்ச்சியடைந்தாலும், உடனடியாகக் காரின் வேகத்தைக் குறைத்தார்.
பின்னர் மற்ற வாகன ஓட்டிகளையும் அவர் அவ்வாறே செய்யுமாறு கட்டளையிட்டார். இந்தச் சம்பவம் குறித்த அவசர அழைப்பைத் தொடர்ந்து, காவல்துறையினர் விரைந்து வந்து அந்த நபரைத் தடுத்து வைத்தனர்.
சந்தேக நபர் மனநலச் சட்டம் (பராமரிப்பு மற்றும் சிகிச்சை) 2008இன் பிரிவு 7இன் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும், இந்தச் சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் காவல்துறை தெரிவித்தது. இந்தச் செயல், தனிநபரின் மனநலப் பிரச்சினையின் அறிகுறியாகப் பகுப்பாய்வு செய்யப்படுகிறது.




