ஷா ஆலம், அக் 30: மாணவர்கள், நோயாளிகள் மற்றும் இளம் விளையாட்டு வீரர்கள் உள்ளிட்ட 11 பேர், மொத்தம் RM19,000 மதிப்பிலான உதவியை யாயாசான் மந்திரி புசார் சிலாங்கூர் அல்லது எம்.பி ஐ வழங்கியுள்ளது. இது இவ்வாண்டுக்கான நான்காவது கட்ட நிதி வழங்கும் திட்டமாகும்.
இந்த உதவி கல்வி ஆதரவு, மருத்துவச் செலவுகள் மற்றும் துறைகளில் சிறப்பாக விளங்கும் இளம் விளையாட்டு வீரர்களுக்கான ஊக்கத்தொகையையும் உள்ளடக்கியதாக யாயாசான் எம்.பி ஐ தலைமை நிர்வாக அதிகாரி அஹ்மத் அஸ்ரி சைனல் நூர் தெரிவித்தார்.
“சிறிய தொகையாக இருந்தாலும், இந்த உதவி அவர்கள் மீதான சுமையை குறைத்து, தங்கள் இலக்கை நோக்கி தொடர்ந்து முன்னேறுவதற்கான உற்சாகத்தை அளிக்கும் என்று நம்புகிறோம்,” என அவர் கூறினார். மேலும் ஒவ்வொரு விண்ணப்பமும் பெறுநரின் தேவையை அடிப்படையாகக் கொண்டு பரிசீலிக்கப்படுகிறது. அதில் மாதாந்திர குடும்ப வருமானம் RM4,000 க்கும் குறைவாக இருப்பது,நோய், அதிக பொறுப்பு அல்லது குடும்ப அவசர நிலை போன்ற காரணங்கள் கருத்தில் கொள்ளப்படுகின்றன.
யாயாசான் எம்.பி ஐ கல்வி, பேரிடர் நிவாரணம், சுகாதாரம் மற்றும் சமூக நலன் உள்ளிட்ட பல துறைகளில் சமூக பொறுப்பு (CSR) பணிகளைத் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது என்று அவர் கூறினார்.
சிலாங்கூர் மாநில மந்திரி புசார் டத்தோ’ ஸ்ரீ அமிருடின் ஷாரி அவர்களின் நோக்கத்திற்கிணங்க, சிலாங்கூர் மாநிலத்தில் எவரும் புறக்கணிக்கப்படமாட்டார்கள். மாநிலத்தின் வளர்ச்சி பலன்களை அனைத்து மக்களும் அனுபவிப்பதை உறுதிசெய்யும் பாலமாக யாயாசான் எம்.பி ஐ செயல்படுகிறது என அவர் கூறினார்.





