ad

உலகின் செல்வாக்குமிக்க முஸ்லிம் தலைவர்களில் முதல் 10 இடங்களைப் பிடித்தார் பிரதமர் அன்வார்

30 அக்டோபர் 2025, 4:49 AM
உலகின் செல்வாக்குமிக்க முஸ்லிம் தலைவர்களில் முதல் 10 இடங்களைப் பிடித்தார் பிரதமர் அன்வார்

கோலாலம்பூர், அக் 30: 'உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் 2026' (The Muslim 500) எனும் உலகின் செல்வாக்குமிக்க முஸ்லிம் தலைவர்களின் தரவரிசை பட்டியலில் மலேசியப் பிரதமர் டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் பத்தாம் இடத்தில் இடம்பிடித்துள்ளார்.

2026ஆம் ஆண்டின் அறிக்கையின் படி, டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் 10ஆவது இடத்தை அலங்கரிக்கும் வேளையில் 2025ஆம் ஆண்டு அவர் 15ஆவது இடத்தில் இருந்தார் என்று ஜோர்டானைத் தளமாகக் கொண்ட அரச இஸ்லாமிய மூலோபாய ஆய்வுகள் மையத்தினால் (RISSC) வெளியிடப்பட்ட 'உலகின் 500 மிகவும் செல்வாக்கு மிக்க முஸ்லிம்கள் 2026' (The Muslim 500) பட்டியலில் குறிப்பிடப்பட்டிருந்தது.

அவர் தலைமை தாங்கும் ஒற்றுமை அரசாங்கத்தின் தலைவராக ஆற்றிய பங்கும், சர்வதேச மனிதாபிமானப் பிரச்சினைகளில், குறிப்பாகப் பலஸ்தீனப் பிரச்சினையில், இஸ்லாமிய உலகின் உரத்த குரலாக ஒலிக்கின்ற வகையிலும் அவரது செல்வாக்கு உயர்ந்துள்ளதாக இந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.

கடந்த நவம்பர் 2022ஆம் ஆண்டு, நாட்டின் 10ஆவது பிரதமராக பொறுப்பேற்ற டத்தோஶ்ரீ அன்வார் இப்ராஹிம் மடாணி எனும் கொள்கையை அறிமுகப்படுத்தினார்.

மேலும், அவர் ஆசியான் பிராந்தியத்தில் அமைதிப் பேச்சாளராக ஆற்றிய முக்கியப் பணி, குறிப்பாகத் தாய்லாந்துக்கும் கம்போடியாவுக்கும் இடையிலான எல்லைப் பதற்றத்தைக் குறைப்பதில் மலேசியாவின் பங்களிப்பை உறுதிப்படுத்தியமை, சர்வதேச இராஜதந்திரத்தில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அத்துடன் 1983 முதல் 1988 வரை மலேசிய சர்வதேச இஸ்லாமியப் பல்கலைக்கழகத்தின் (UIAM) முன்னாள் வேந்தராக இருந்தது போன்ற கல்வி மற்றும் இஸ்லாமியச் சிந்தனைத் துறைகளில் அவர் ஆற்றிய பங்களிப்பையும் RISSC அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

பலஸ்தீனியப் பிரச்சினையில், சியோனிச இஸ்ரேல் ஆட்சியின் அட்டூழியங்களுக்கு எதிராக அவர் எடுத்துள்ள உறுதியான நிலைப்பாடு போற்றப்படுகிறது. ஹமாஸ் தலைவர் இஸ்மாயில் ஹனியேஹ் படுகொலை தொடர்பான பதிவுகளை 'மெட்டா' நிறுவனம் நீக்கியதை, 'அடக்குமுறைக்கு எதிரான வெளிப்படையான மற்றும் கோழைத்தனமான செயல்' என்று அவர் விமர்சித்ததையும் அறிக்கை பதிவு செய்துள்ளது.

கத்தார் அமீர் ஷேக் தமிம் பின் ஹமத் அல்-தானி, பாகிஸ்தானைச் சேர்ந்த ஷேக் முஹம்மது தாக்கி உஸ்மானி மற்றும் யேமனைச் சேர்ந்த ஷேக் அல்-ஹபீப் உமர் பின் ஹபீஸ் ஆகியோர் 2026ஆம் ஆண்டுப் பட்டியலில் முதல் இடங்களில் இடம்பெற்றுள்ளனர். 2009ஆம் ஆண்டு முதல் வெளியிடப்பட்டு வரும் இந்த வருடாந்திரப் பட்டியல், உலகின் மிகவும் செல்வாக்கு மிக்க 500 இஸ்லாமியர்களை, தலைமைத்துவம், மதம், கல்வி, பொருளாதாரம் மற்றும் மனிதாபிமானம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அங்கீகரிக்கிறது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.