ஜகார்த்தா, அக் 30 — யோக்யகர்த்தா மாகாணத்தில் இந்த வாரம் சுமார் 700 மாணவர்கள் உணவு நச்சால் பாதிக்கப்பட்டுள்ளதையடுத்து, அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மாணவர்கள், அதிபர் பிரபோவோ சுபியாந்தோவின் இலவச பள்ளி உணவு திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட உணவுகளை உண்டிருந்தனர்.
இந்த இலவச பள்ளி உணவு திட்டம் ஜனவரியில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது பிரபோவோவின் முக்கிய தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். ஆனால் நேற்று வரையிலான தரவின்படி, சுமார் 15,000 குழந்தைகள் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று JPPI எனப்படும் ஒரு அரசியலற்ற அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் அந்த அமைப்பு, இந்த திட்டத்தை தற்காலிகமாக நிறுத்துமாறு கோரிக்கைவிடுத்துள்ளது.
உணவுகள் சரியான முறையில் சேமிக்கப்படாமை மற்றும் சமைத்த உணவுகளை தாமதமாக வழங்குவது போன்ற காரணங்களால் உணவு நச்சு ஏற்படுவதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து உணவு சுகாதாரமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க சமையலறை பணியாளர்களுக்கு உணவு அளவுகளை குறைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நேற்று, அதிபர் பிரபோவோ, சுகாதார அமைச்சர் மற்றும் BGN தலைவரை உள்ளடக்கிய ஒரு அமைச்சரவை அணியை அமைத்து, திட்டத்தை சிறப்பாக கண்காணிக்க உத்தரவிட்டார். இந்த ஆண்டிற்காக அரசு சுமார் RM43.24 பில்லியன் ஒதுக்கியுள்ள நிலையில், BGN இவ்வாண்டு இறுதிக்குள் சுமார் RM25 பில்லியன் மட்டுமே பயன்படுத்த முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




