ஷா ஆலம், அக் 30: புக்கிட் அம்பாங் பகுதியில் தடை செய்யப்பட்ட இடங்களில் உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்த ஐந்து விற்பனையாளர்களின் உபகரணங்களை அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே) பறிமுதல் செய்துள்ளது.
இந்த நடவடிக்கை, தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட கண்காணிப்பு மற்றும் பொதுமக்களின் புகார்களுக்குப் பிறகு எடுக்கப்பட்டது என எம்பிஏஜே தெரிவித்தது. அந்த பகுதியில் சட்டவிரோத விற்பனை நடவடிக்கைகள் போக்குவரத்து நெரிசலையும் சுற்றுப்புற சுத்தத்தையும் பாதித்ததாக கூறப்பட்டது.
“சட்டபூர்வ அனுமதி இன்றி வியாபாரம் நடத்தியதை கண்டுபிடித்ததை அடுத்து, அமலாக்கத் துறை இந்த நடவடிக்கையை மேற்கொண்டது,” என அந்த நகராண்மை கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்துள்ளது.
சட்டத்தின் அடிப்படையில் ஒழுங்கை பேணவும், பொதுமக்களின் பாதுகாப்பு, சுத்தம் மற்றும் சுகாதாரத்தை உறுதிப்படுத்தவும் தொடர்ச்சியான அமலாக்கம் மேற்கொள்ளப்படும் என எம்பிஏஜே தெரிவித்தது.
மேலும், வியாபாரிகள் உரிம நிபந்தனைகளைப் பின்பற்றி தடை செய்யப்பட்ட இடங்களில் வியாபாரம் செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள்.
பொதுமக்கள் SISPAA எம்பிஏஜே வழியாக அல்லது தொலைபேசி எண் 1-800-22-8100 மூலம் புகார்களை அளிக்கலாம்.




