செர்டாங், அக் 30 — ஸ்ரீ கெம்பாங்கானில் உள்ள Blue Water Estate சாலைக்கு அருகில் நேற்று மதியம் கைகள் கட்டப்பட்ட நிலையில் நிர்வாணமாக இருந்த ஒரு பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று மதியம் 3.45 மணியளவில் பொதுமக்களிடமிருந்து அழைப்பு வந்ததாகவும், அங்கு உடனடியாக போலீசார் சென்று விசாரணை நடத்தியதாகவும் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைவர் ஏ.சி.பி முகமத் பாரிட் அஹ்மத் தெரிவித்தார். ஆரம்ப சோதனையில், சடலம் சுமார் 144 செ.மீ உயரம், தோள்வரை நீளமான மஞ்சள் நிற முடி மற்றும் நீண்ட நகங்கள் கொண்ட ஒரு பெண் என கண்டறியப்பட்டது.
அந்த பெண் இரு காதுகளிலும் வெள்ளி காதணிகள் அணிந்திருந்தார். மேலும் பச்சை மற்றும் சிவப்பு நிற துணி வளையலும் வலது கையில் பச்சை குத்திருந்தது என்று அவர் நேற்று இரவு வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார். மேலும் பொதுமக்கள் யாரேனும் இந்த சம்பவம் குறித்து தகவல் வைத்திருந்தால், 03-8074 2222 என்ற எண்ணில் செர்டாங் மாவட்ட போலீஸ் தலைமையகத்தை அல்லது அருகிலுள்ள போலீஸ் நிலையத்தையும் தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்.




